சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. வரும் புதன்கிழமை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக, முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும், தற்போதைய தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட அமைப்புச் செயலாளருமான சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

வரும் புதன்கிழமை ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. நவம்பர் 6ஆம் தேதி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராக வேண்டும் என்று முதல் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

2016-&2021 அதிமுக ஆட்சிக் காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், தனது வருமானத்திற்கு அதிகமாக 34.79 கோடி சொத்து சேர்த்ததாக விஜயபாஸ்கர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதன் அடிப்படையில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

முன்னதாக, 2021-ஆம் ஆண்டில் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத்துறை பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. கடந்த 2023ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததும் குறிப்பிடத்தக்கது.

அதிமுக-வில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த சி. விஜயபாஸ்கருக்கு, புதுக்கோட்டை மாவட்ட அமைப்புச் செயலாளர் என்ற முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட அரசியலில் நீண்ட காலமாகச் செல்வாக்கு மிக்க முகமாக வலம் வரும் அவர், தற்போது தவெக-வின் களப்பணிகளையும் நலத்திட்ட உதவிகளையும் தீவிரமாக ஒருங்கிணைத்து வருகிறார். இவர் தவெக விராலிமலை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இப்படிப்பட்ட சூழலில்தான் அவருக்கு எதிராக வழக்கு தீவிரம் அடைந்துள்ளது.

மத்திய அரசின் கீழ் இயங்கும் அமலாக்கத்துறை மீண்டும் விஜயபாஸ்கருக்குத் தொடர்ந்து சம்மன் அனுப்பி வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தவெக-வின் முக்கிய நிர்வாகிகளுக்குக் குறிவைத்து, மத்திய அரசு மறைமுக அரசியல் அழுத்தம் கொடுக்கிறதா என்ற கேள்வியும் அரசியல் பார்வையாளர்களால் எழுப்பப்படுகிறது.

மறுபுறம், புதுக்கோட்டை மண்டலத்தில் கட்சிப் பணிகள் மற்றும் தேர்தல் வியூகங்களை வகுக்க வேண்டிய முக்கியமான நேரத்தில், விஜயபாஸ்கருக்கு ஏற்பட்டுள்ள இந்தச் சட்ட நெருக்கடி உள்ளூர் தவெக நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் 18-ஆம் தேதி நடைபெறவுள்ள விசாரணையில் விஜயபாஸ்கர் நேரில் ஆஜராவாரா அல்லது சட்டரீதியாக வேறு ஏதேனும் அவகாசம் கோருவாரா என்பது அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவிர, இடைத்தேர்தலில் விஜயபாஸ்கர் போட்டியிடுவாரா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. காரணம், வழக்குவிசாரணை… கைது நடவடிக்கை… நீதிமன்ற தண்டனை… என பல்வேறு பக்கமும் இவருக்கான நெருக்கடிகள் அதிகமாகி வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal