மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் துணை ஜனாதிபதி வருகையின் போது மின் தடை ஏற்பட்ட விவகாரத்தில் இளநிலை மின் பொறியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

குடியரசுத் துணைத் தலைவர் வருகையின்போது மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மின் தடை ஏற்பட்ட விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையையொட்டி பசும்பொன்னில் உள்ள நினைவிடத்தில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் ஆகியோர் இன்று மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, துணைக் குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றார். தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், துணைக் குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து துணைக் குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், கோயிலுக்குள் சாமி தரிசனம் மேற்கொண்டபோதும், பின்னர் வெளியே செய்தியாளர்களைச் சந்தித்தப்போதும் மின் தடை ஏற்பட்ட விவகாரம் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில், இரண்டு நிமிடம் மட்டுமே மின் தடை ஏற்பட்டதாகவும், அதுவும் உடனே சரி செய்யப்பட்டுவிட்டது எனவும் மின் துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் இந்த மின் தடை ஏற்பட்ட விவகாரத்தில் மீனாட்சி அம்மன் கோயில் இளநிலை மின் பொறியாளர் ஜானகி ராமன் பணியிடை நீக்கம் செய்து கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும், பணியில் கவனக்குறைவாக செயல்பட்டது குறித்து 15 நாட்களில் விளக்கம் அளிக்க ஜானகிராமனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal