வரும் செப்டம்பர் 19ம் தேதி அன்று திமுக முப்பெரும் விழா அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திடீர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதால், செப்டம்பர் 15-ஆம் தேதி நடைபெற இருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், அவ்விழா வரும் 19-ஆம் தேதி நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.

திமுகவில் ஆண்டுதோறும் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய நாளான செப்டம்பர் 17, பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15 மற்றும் தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17 ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகளையும் ஒன்றாகச் சேர்த்து ஆண்டுதோறும் முப்பெரும் விழாவாக திமுக கொண்டாடி வருகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான முப்பெரும் விழா செப்டம்பர் 15-ஆம் தேதி சென்னை அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. விழாவில் விருது பெறுவோர் பட்டியலும் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்குத் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதன் காரணமாக, செப்டம்பர் 15-ஆம் தேதி நடைபெறவிருந்த விழா ஒத்திவைக்கப்படுவதாகத் தலைமை அறிவித்தது.

தற்போது, வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி மாலை 5:30 மணி அளவில் சென்னை அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இவ்விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal