“நாளை தொடங்கவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவரைப் பங்கேற்கவிடாமல் தடுப்பதற்காகவே கைது செய்வது அப்பட்டமான கோழைத்தனம்” என திமுக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் கண்டித்துள்ளனர்.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை எதிர்கொள்ளத் துணிச்சலற்ற கோழை தவெக அரசு காவல்துறையை ஏவி அவரைக் கைது செய்துள்ளதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நேற்று தஞ்சையில் விவசாயிகளுக்காகக் கழகம் எழுப்பிய கோரிக்கைகள் குறித்து வாய்திறக்காத அரசு, அந்தப் போராட்டத்தின் எழுச்சியைப் பார்த்து தொடை நடுங்கி, ஜனநாயகத்தின் முக்கியத் தூணான எதிர்க்கட்சித் தலைவரையே அடிப்படையற்ற பொய் வழக்கில் கைது செய்துள்ளது அராஜகத்தின் உச்சகட்டம். மிக மோசமான ஜனநாயகப் படுகொலை.

முதல்வர் விஜய் தனது “Apprentice” ஆட்சியில் சரியும் சட்டம் – ஒழுங்கு, மாநிலம் முழுவதும் மக்களை வாட்டும் மின்கட்டணப் புகார்கள், விவரம் இல்லாத அமைச்சர்கள் அடிக்கும் கூத்துகள், “இம்” என்றால் சிறைவாசம் என்ற ஆணவத்தைப் பிரதிபலிக்கும் அடக்குமுறைகள், பாலியல் வழக்குகளில் அடுத்தடுத்து சிக்கும் தவெக நிர்வாகிகள், எல்லாவற்றுக்கும் மேல் டெல்டா விவசாயிகள் கண்ணீர் சிந்த வைக்கும் காவிரிப் பிரச்சினையில் முதல்வரின் மவுனமும் மெத்தனமும் என எதிர்க்கட்சித் தலைவர் நாளை தொடங்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் எழுப்பவுள்ள கேள்விகளுக்கு இன்றே அஞ்சி நடுங்கி, தஞ்சாவூரில் பேசாத ஒன்றைப் பேசியதாகப் புனைந்து, கற்பனைக் குற்றச்சாட்டின் அடிப்படையில் எப்ஐஆர் ஒன்றைப் போட்டு, உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலையும் மீறி அவசர அவசரமாகக் கைது செய்துள்ளது அடாவடி தவெக அரசு.

கொடுங்கோல் ஆட்சியின் அலங்கோலத்தினை அரங்கேற்ற இந்த அராஜகத்தைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள். பாசிசத்தின் உச்சகட்டமாக எங்கள் எதிர்க்கட்சித் தலைவர் அவர்களைப் பொய் வழக்கில் கைது செய்துள்ள முதல்வர் விஜய் இப்போது நடத்தி வருவது திமுக கூட்டணியிடம் இருந்து கடன் வாங்கிய கட்சிகளுடன் ஆதரவிலான ஆட்சி என்பதை ஏனோ “அதிகார போதையில்” மறந்து, மகுடி வாசித்துக் கொண்டிருக்கிறார்.

முதல்வர் விஜய் இப்படியெல்லாம் திமுகவையும் மிரட்ட முடியாது. எங்கள் எதிர்க்கட்சித் தலைவரையும் அச்சுறுத்த முடியாது. நாங்கள் இதையும் சந்திப்போம், எதையும் சந்திப்போம். சட்டப்பேரவையில் பதில் சொல்லாவிட்டாலும் மக்களுக்கு இந்த அரசு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இது குறித்து திமுக எம்.பி கனிமொழி வெளியிட்டுள்ள தனது எக்ஸ் தளப் பதிவில்,“எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை தனிப்பட்ட முறையில் பழிவாங்க வேண்டும் என்றால், அரசு வழக்குத் தொடுக்கட்டும். நீதிமன்றம் தீர்ப்பளிக்கட்டும். ஆனால், எதிர்க்கட்சியாக இருக்கும் திமுகவை எதிர்கொள்ளத் துணிச்சலின்றி, இப்படியான அடக்குமுறைகளில் தவெக அரசு ஈடுபடுவது சட்டத்திற்குப் புறம்பானது.

நாளை தொடங்கவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவரைப் பங்கேற்கவிடாமல் தடுப்பதற்காகவே கைது செய்வது அப்பட்டமான கோழைத்தனம்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

“நாளை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள இந்த முக்கியமான நேரத்தில், ஒரு பொதுக்கூட்டத்தில் கருத்து தெரிவித்ததாகக் கூறி எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்வது ஜனநாயக உணர்வுக்கும் அரசியல் நாகரிகத்துக்கும் பொருந்தாத செயலாகும்” என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

நாளை சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெறும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மீதான கைது நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள தனது எக்ஸ் தளப் பதிவில், “சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக் கூடிய உதயநிதி ஸ்டாலின் காவல் துறை கைது செய்திருக்கிறது. உதயநிதிக்கு நாவடக்கம் தேவை என்பதை நாம் பல ஆண்டுகளாக கூறி வருகிறோம். தான் இருக்கும் பொறுப்பின் மாண்பு அறியாமல் அவர் தொடர்ந்து வாய்க்கு வந்தபடி பேசுவதும், பெண்களை இழிவாக பேசுவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அவரது பேச்சுக்கு வழக்கு பதிவது என்பது வேறு. ஆனால், நாளை பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்கும் நிலையில், இன்றைய தினம் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரை தவெக அரசு கைது செய்யத் துடிப்பது என்பது, இது வழக்கைத் தாண்டிய அரசியல் பின்புலம் கொண்டதோ என்ற சந்தேகத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பு சட்டமன்றத்தின் முக்கிய அங்கம். அந்த பொறுப்பில் உள்ளவர் இல்லாமல் முடக்கிவிட்டு சட்டப்பேரவை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அரசு செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது. அதேபோல், நாளை சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெறும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மீதான கைது நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal