கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘நாங்கள் எப்போது வேண்டுமானாலும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வோம். த.வெ.க. கூட்டணியில் இருந்து வெளியே வருவோம்’ என்கிற ரீதியில் திருமாவளவன் பேசியிருந்தார். திருமாவின் இந்தப் பேச்சிற்கு ‘செக்’ வைக்கும் விதமாக விஜய் சில காய்களை நகர்த்தி வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
இது பற்றி பனையூர் வட்டாரத்தில் பேசினோம். ‘‘சார், வெறும் 2 எம்எல்ஏக்களை வைத்திருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது, ஆரம்பத்திலிருந்து தவெகவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வந்திருந்தது. இப்படி இருக்கையில், திருமாவளவனின் பேச்சும் ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என்பதை போல இருக்கிறது. இதையெல்லாம் கவனித்த முதலமைச்சர் விஜய், விசிகவுக்கு செக் வைக்க பாமகவை உள்ளே கொண்டுவர இருக்கிறார்.

திருமாவளவனின் பேச்சு குறித்து சமீப நாட்களாகவே பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. அவர் சொல்வது ஒன்றாக இருக்கிறது செய்வது வேறு ஒன்றாக இருக்கிறது என்பதுதான் அந்த விமர்சனம். தேர்தல் முடிவுக்கு பின்னர் திருமாவளவன் பேசியதை பாருங்களேன்…? திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த விசிக, தவெகவுக்கு தாவும் மன நிலையில்தான் இருந்தது. முதலில் காங்கிரஸ் விஜய்க்கு அதரவு தெரிவித்திருந்தது.
இதையடுத்து இடதுசாரி கட்சிகளுக்கு தவெக கடிதம் எழுதி ஆதரவு கோரியிருந்தது. சிபிஎம், சிபிஐ என இரண்டு இடதுசாரி கட்சிகளும் தங்கள் மாநில செயற்குழுவை கூட்டி தவெகவுக்கு ஆதரவு அளிப்பது என்று முடிவெடுத்தன. இதையடுத்து, இந்த முடிவுக்கு மாநில குழுவில் ஒப்புதலையும் பெற்றன. ஆதரவு எனில், அமைச்சர் பதவியை பெற்றுக்கொண்டு ஆதரவு கொடுப்பது கிடையாது. வெளியிலிருந்து ஆதரவு கொடுப்பது என்று முடிவெடுத்தன.
இடதுசாரிகள் என்ன முடிவு எடுக்கிறார்களோ, அதையேத்தான் நாங்களும் அறிவிப்போம் என்று திருமாவளவன் பேசியிருந்தார். அப்படியெனில் விசிகவும் வெளியிலிருந்து ஆதரவு என்கிற நிலைப்பாட்டை எடுக்கும் என்றுதான் பலரும் பேசியிருந்தனர். ஆனால், தவெகவுக்கு ஆதரவு அளிக்கும் விஷயத்தில் விசிக கால தாமதம் செய்தது. ஐயுஎம்எல் கூட தங்கள் நிலைப்பாட்டை அறிவித்து, விஜய்க்கு ஆதரவு தெரிவித்துவிட்டன. ஆனால், விசிக வாய் திறக்கவில்லை. பின்னர் கடைசி நேரத்தில் தனது ஆதரவை தெரிவித்தது. இதுவே விஜய்யை டென்ஷன் ஆக்கியது.
இதற்கடுத்து ஒரு அமைச்சர் பதவியையும் விசிக பெற்றது. இந்த விஷயம் தவெகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. அதாவது வெறும் 2 எம்எல்ஏக்கள் கொண்ட விசிகவுக்கு எதுக்கு அமைச்சர் பதவியை கொடுக்கனும்? 4 எம்எல்ஏக்கள் வைத்திருக்கும் இடதுசாரிகளே சைலண்ட்டாக இருக்கிறார்கள், திருமாவளவன் இந்த விஷயத்தில் காரியக்காரராக இருக்கிறாரே! என்றும் விமர்சனங்கள் எழுந்தன. இது போதாது என்று, சமீபத்தில் தனியார் செய்தி ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில், நாங்கள் எப்போது வேண்டுமானாலும் தவெக கூட்டணியை விட்டு வெளியேறுவோம் என திருமாவளவன் பேசியிருந்ததும் சர்ச்சயை ஏற்படுத்தியிருந்தது.
இதையெல்லாம் கவனித்த விஜய், கூட்டணிக்குள் பாமகவை கொண்டுவர இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு முன்னர், அனைத்து கட்சிகளையும் கூட்டி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அன்புமணி தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தார். இந்த தீர்மானத்தின் நகலை, முதலமைச்சர் விஜய்யை சந்தித்து கொடுத்திருந்தார். அதன்படி ஆளுநர் உரையில், மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பை முடித்த பின்னர் தமிழக அரசு சமூக நீதி சர்வே நடத்தும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆக, தங்களுடைய கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டது என்று குஷியாகியிருக்கிறார் அன்புமணி.
தவிர, தனது மனைவியும், எம்.எல்.ஏ.வுமான சௌமியா அன்புமணி தலைமையில் பா.ம.க. எல்.எல்.ஏ.க்கள் விஜய்யை சந்தித்து நன்றியும் தெரிவித்தனர். இதற்கிடையே அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த த.மா.கா. தலைவர் வாசனே விஜய் பக்கம் செல்லும் மனநிலையில் இருக்கும் போது, ‘பா.ம.க.வும் த.வெ.க. கூட்டணியில் இணைந்தால் என்ன?’ என அன்புமணியும் யோசிக்க ஆரம்பித்துவிட்டாராம். விரைவில் த.வெ.க. கூட்டணியில் பா.ம.க. இணையும், சௌமியா அன்புமணி அமைச்சராகப் பதவியேற்பார்’’ என்றனர்.
அரசியலில் எதுவும் நடக்கலாமே..?
