கடந்த 2021ல் சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட திமுகவின் சீனியர் சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளடி வேலைகளால் தோற்கடிக்கப்பட்டார்! அதேபோல் 2026 சட்டமன்றத் தேர்தலில் பெருந்துறை தொகுதியில் உள்ளடி வேலைகள் நடந்திருப்பதாக உளவுத்துறை கொடுத்த தகவல்கள்தான் அறிவாலயத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

இது பற்றி ஈரோடு மாவட்டத்தில் உள்ள நடுநிலையான சீனியர் உடன் பிறப்புக்கள் சிலரிடம் பேசினோம். ‘‘சார், சுப்புலட்சுமி ஜெகதீசன் எம்.ஜி.ஆரை எதிர்த்து தி.மு.க.விற்கு வந்தவர். இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு கொடுத்ததால் ‘பொடா’ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறைக் கொடுமைகளை அனுபவத்திவர். ‘தி.மு.க.வே எனது மூச்சு’ என்று இருந்தவரை, கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தற்போது அமைச்சராக இருக்கக்கூடிய சு.முத்துசாமி உள்ளடி வேலைகள் செய்து தோற்கடித்தார். இந்தக் குற்றச்சாட்டை சுப்புலட்சுமி ஜெகதீசனமே தலைமையிடம் வைத்தார்.

சுப்புலட்சுமி ஜெகதீஷன்…

தவிர, எனக்கு எதிராக வேலைபார்த்த தி.மு.க. ஒன்றியச் செயலாளர்கள் மற்றும் அமைச்சர் சு.முத்துசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. தலைமைக்கு கோரிக்கை வைத்தார். ஆனால், தி.மு.க. தலைமை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மனம் நொந்துபோன சுப்புலட்சுமி ஜெகதீசன் அரசியலை விட்டே விலகினார். இந்த விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்திருந்தால் இன்றைக்கு மீண்டும் இந்த நிலைமை வந்திருக்காது’’ என்றனர்.

அவர்கள் மேலும் நம்மிடம் பேசியபோது, ‘‘2026 சட்டமன்றத் தேர்தலிலும் அமைச்சர் சு.முத்துசாமி உள்ளடி வேலைகளில் இறங்கியிருக்கிறார். அதாவது, ஈரோடு மாநகராட்சி மேயரின் கணவரும், ஈரோடு மாநகர் மா.செ.வுமான சுப்பிரமணியனுக்கு சீட் கிடைக்காமல் பார்த்துக்கொண்டார். அதே போல், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட்ட சந்திரக்குமாருக்கும் சீட் கிடைக்காமல் பார்த்துக்கொண்டார். இதனால், சந்திரக்குமார் சமுதாயத்தைச் சேர்ந்த வாக்குகள் தி.மு.க.விற்கு கிடைக்காமல் போனதற்கும் அமைச்சர் காரணமாகிவிட்டார்.

தவிர, அத்திக்கடவு & அவிநாசி குடிநீர் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கி திறந்து வைக்கப்பட்டாலும், பவானி ஆற்றில் வெள்ளம் அதிகளவில் வந்தபோது, குளம், குட்டைகளில் தேக்கி வைப்பதற்கான முயற்சிகளை எடுக்கவில்லை. இதனால், இன்றளவிலும் குளம் குட்டைகள் வரண்டு கிடக்கிறது. விளைவு, பெருந்துறை தொகுதி விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். இதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. தேப்பு வெங்கடாச்சலம் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்படவேண்டும் என்பதுதான் அவரின் எண்ணவோட்டமாக இருந்தது.

இந்த நிலையில்தான், 2026 சட்டமன்றத் தேர்தலில் பெருந்துறை தொகுதி தி.மு.க. வேட்பளார் தோப்பு வெங்கடாச்சலத்திற்கு எதிராக அ.தி.மு.க.வினருடன் கைகோர்த்து செயல்பட்டார் அமைச்சர் என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற 14 தேர்தல் களில் ஒன்பது முறை அதிமுக வெற்றி பெற்றது. ஒரு முறை கூட திமுக வெற்றி பெற்றதில்லை. அதனால் ஒவ்வொரு தேர்தல்களிலும் திமுக முக்கிய நிர்வாகிகள் எதிர் தரப்பிடம் பணம் பெற்றுக் கொண்டு எதிர்க்கட்சிக்கு சாதகமாகிவிடும் சூழ்நிலை தொடர்ந்து இருந்தது. கடந்த 2021 தேர்தலில் கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டு ஈஸ்வரன் சம்மந்தி கே.கே.சி. பாலு வேட்பாளராக களம் இறங்கினார்.
இவரது தோல்விக்கு காரணம், திமுக முக்கிய நிர்வாகிகள் அனைவரும் அதிமுக வேட்பாளருக்கு மறைமுக ஆதரவு மற்று எதிர்க்கட்சி இடம் பணம் பெற்றுக் கொண்டது. இந்த விவகாரம் குறித்து மாவட்ட செயலாளர் முத்துசாமி கவனத்திற்கு கொண்டு சென்றும் கூட அவர் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார். அதனால் அதிமுக வெற்றி பெற்றது.

இந்த விவகாரம் முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்குச் செல்ல 2026ல் தோப்பு வெங்கடாசலத்தை களம் இறக்கினார். காலதாமதமாக களமிறக்கப்பட்ட காரணத்தால் கட்டமைப்பு இல்லாமல் இருந்த திமுகவை ஒரு வருட காலத்திற்குள் கட்டமைக்க மிகவும் போராடினார். இதே நிலைதான் பவானி தொகுதிகளில் இருந்தது. நிர்வாகிகள் அனைவரும் முத்துசாமி நியமனம் செய்த ஆட்களாக இருந்த காரணத்தால் ஒத்துழைப்பு துளியும் இல்லை. இருந்தாலும் கட்சியை ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வந்தார்.

அமைச்சரின் ஆதரவாளர் கே.பி.சாமி தனது மகன் ராஜாவை அ.தி.மு.க. முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சீனிவாசனோடு சேர்ந்து பட்டவர்த்தனமாக அ.தி.மு.க.விற்கு ஓட்டு கேட்டனர். மேலும் ஊத்துக்குளி முன்னாள் ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கோபால் மற்றும் நிர்வாகிகள் மற்றும் கே.பி.சாமியின் நெருங்கிய உறவினர்களாக இவர்கள் அனைவரும் அமைச்சர் சு.முத்துசாமியோடு நேரடி தொடர்பில் இருப்பவர்கள். இவர்களும் வெளிப்படையாகவே அ.தி.மு.க.விற்கு வாக்குகள் சேகரித்தனர். இவர்களில் பல பேருக்கு அ.தி.மு.க.விலிருந்து லட்சக்கணக்கில் பணம் கைமாறியிருப்பதாக தெரியவருகிறது.

இதனை பலமுறை முத்துசாமியிடத்தில் எடுத்துக்கூறியும் நடவடிக்கை எடுக்காமல், அலட்சியமாக இருந்த காரணத்தினால் சில ஆயிரம் தி.மு.க. வாக்குகள் அ.தி.மு.க.விற்கு சென்றது. தவிர, சிப்காட்டில் சாமியின் உறவினரான கோபால் வகையறாக்கள் சட்டத்திற்கு புறம்பாக கனிமவளங்களை கடத்தி கோடிக்கணக்கில் சம்பாதித்தனர். தி.மு.க.வின் மூலம் பல கோடிகளை சம்பாதித்த இவர்கள் அ.தி.மு.க.வுக்கு தேர்தல் வேலைகளை பார்த்துள்ளனர்.

கே.பி.சாமியின் உதவியாளர் பொதுக்குழு உறுப்பினர் பூபதி அ.தி.மு.க.விற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். தவிர, பெருந்துறை நகர செயலாளர் நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் தனக்கு நெருக்கமான சந்தோஷ் என்பவரை சுயேச்சையாக களமிறக்கப்பட்டு தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் தேர்தல் அதிகாரியிடம் தவறான புகார்களை சொல்லி பிரச்சாரத்தின் வேகத்தை குறைக்க ராஜேந்திரன் மூலமாக உள்ளடி வேலை நடந்தது.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் சுப்புலட்சுமிக்கு எதிராக உள்ளடி வேலைபார்த்த அமைச்சர் சு.முத்துசாமி, 2026 தேர்தலில் சொந்தக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலத்திற்கு எதிராக வேலைபார்த்ததுதான் கொடுமை’’ என்றனர்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இனியும் உள்குத்து அரசியல் தொடராமல் பார்த்துக்கொண்டால்தான் கொங்கு மண்டலம் தி.மு.க.வின் கோட்டையாக மாறும் என்கிறார்கள் நடுநிலையான உடன் பிறப்புக்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal