சபாநாயகர் அப்பாவு அறையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், அமைச்சர் சேகர்பாபுவும் 15 நிமிடங்கள் ஆலோசனை நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ஓபிஎஸ் விரைவில் திமுகவில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

அ.தி.மு.க.வில் முதல் அமைச்சராக பதவி சில காலம் பதவி வகித்த ஓ.பி.எஸ். தி.மு.க.வில் இணைய வாய்ப்பிருக்கிறதா என தமிழக அரசியல் பார்வையாளர்களிடம் பேசினோம்.

‘‘சார், எடப்பாடி பழனிசாமியும், டி.டி.வி.தினகரனும் கைகோர்த்தது கனவா இல்லை நனவா என்றே புரியவில்லை. இருவரும் கைகோர்த்தது அ.தி.மு.க.வினரை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

ஓபிஎஸ்ஸை பொருத்தமட்டில் கடந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து செயல்பட்டார், அதிமுகவில் இணைய முட்டி மோதிய நிலையில் அவருக்கு எடப்பாடி பழனிசாமி இடம் கொடுக்காததால் ஓபிஎஸ் பாஜகவில் இணைவார் என சொல்லப்பட்டது. ஆனால் அவரோ அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு எனும் அமைப்பை தொடங்கி என்டிஏ கூட்டணியில் கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டார். தோல்வியடைந்தாலும் அதிக அளவு வாக்குகளை பெற்றார். எனினும் அதிமுகவில் இணைவது என்ற முடிவை அவர் கைவிடாமல் தொடர்ந்து டெல்லி தலைமையிடம் உதவி கேட்டு வந்தார். ஆனால், டெல்லி மேலிடம் கண்டுகொள்ளவில்லை.

பிறகு அதிமுகவை கைப்பற்றுவதற்கு டிடிவி தினகரன், செங்கோட்டையன் உள்ளிட்டோர் தனக்கு உறுதுணையாக இருப்பார்கள் என ஓபிஎஸ் கருதினார். இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு, சென்னையில் நடந்த தனது ஆதரவாளர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் கெடுவெல்லாம் விதித்தார். ஆனால் ஒன்றும் பலனில்லை. டிடிவி தினகரன், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சென்றுவிட்டார். செங்கோட்டையன் தவெகவுக்கு சென்றுவிட்டார்.

சசிகலாவோ வெறும் பிரஸ்மீட்டில் மட்டுமே அதிமுகவை ஒன்றிணைத்து வருகிறார். இதற்கிடையே பியூஷ் கோயலை ஓ.பி.எஸ். மகன் ஓட்டலில் சந்தித்துப் பேசியிருக்கிறார். அதற்கும் பலன் கிடைத்த மாதிரி தெரியவில்லை. ‘நீங்கள் வேண்டுமானால் பா.ஜ.க.வுக்கு வாருங்களே?’ என கேட்டிருக்கிறார். ஆனால், பா.ஜ.க.வுக்கு போகும் எண்ணம் ஓ.பி.எஸ்.ஸுக்கு இல்லை.

இந்த நிலையில்தான், ஓபிஎஸ் ஆதரவாளரும் மாநிலங்களவை எம்பியுமான தருமர் இன்று அதிமுகவில் இணைகிறார். தற்போதைய நிலையில் ஓபிஎஸ் தனித்து விடப்பட்டதாகவே கருதப்படுகிறது. இதனால் அவர் தன்னுடன் இருப்போரையாவது தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்ற கேள்வி எழுந்தது.

இன்று சட்டசபை கூட்டத் தொடர் முடிந்தவுடன் அப்பாவு அறைக்கு ஓபிஎஸ் சென்றார். அங்கு சேகர்பாபு இருந்தார். இருவரும் 15 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனராம். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எல்லாம் திமுகவில் இணைந்து வரும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவமானதாக தெரிகிறது. அதிமுக கூட்டணிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. பாஜகவும் ஓபிஎஸ்ஸை கைவிட்டுவிட்டது. தினகரனையாவது அமித்ஷா அழைத்து பேசி எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணிக்கு வருமாறு அழைத்தார்.

ஆனால் ஓபிஎஸ்ஸை பாஜகவினர் யாருமே கண்டுக் கொள்ளவில்லை. இதனால் தனது அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகாமல் இருக்கவும் ஒரு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஓபிஎஸ் இருக்கிறார். அதிமுகவில் அதிருப்தியில் இருப்போரிடம் திமுக பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. அந்த வகையில் செங்கோட்டையனிடம் கூட சேகர்பாபு பேசியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அவர் தவெகவுக்கு சென்றுவிட்டார். இந்த சந்திப்பு தகவலையும் மறுத்துவிட்டார்.

தற்போது ஓபிஎஸ்ஸுடன் 15 நிமிடங்கள் சேகர்பாபு ஆலோசனை நடத்தி இருக்கும் நிலையில் ஓபிஎஸ் திமுகவில் இணைந்துவிடுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுகவுடன் கூட்டணிக்கு சென்றாலும் ஓரிரு சீட்டுகளுக்கு உழைக்கவும் ஆலோசனைகளை நடத்தவும் ஆதரவாளர்கள் தேவை. ஆனால் சொல்லிக் கொள்ளும்படியாக பிரபலங்கள் யாரும் ஓபிஎஸ்ஸுடன் இல்லாததால் அவர் திமுகவில் இணையும் முடிவை எடுக்க வாய்ப்பிருக்கிறது’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal