யாருக்காக அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்லம் ஒரங்கட்டப்பட்டு, ஒற்றைத் தலைமை ஏற்பட்டதோ, இன்றைக்கு அவரே அ.தி.மு.க.வில் இணைவதுதான் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஒன்றுப்பட்ட அதிமுக என்ற கோஷத்தை முன்வைத்து அரசியல் நடத்தி வருகிறார். ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியிலோ, கூட்டணியிலோ சேர்த்துக்கொள்ள மாட்டோம் என்று எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்தார். இதற்கிடையே சட்டசபை தேர்தலில் பாஜகவிடம் இருந்து கூட்டணி அழைப்பு வரும்என்று ஓ.பன்னீர்செல்வம் நம்பிக் கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அதற்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தடையாக இருபப்பதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருக்கும் முக்கிய தலைவர்கள் மாற்று கட்சிக்கு தாவி வருகிறார்கள்.

மனோஜ் பாண்டியன், சுப்புரத்தினம், மருது அழகுராஜ் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகி சமீபத்தில் திமுகவில் சேர்ந்தனர். குன்னம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.டி.ராமச்சந்திரன் திமுகவில் இணையப்போவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், திடீரென அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான தர்மர் எம்.பி. அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தர்மர் கடந்த 2022-ம் ஆண்டு அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்ட பின்னர் அவருடன் கை கோர்த்து செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் இன்று மாலையில் தர்மர் எம்.பி. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து மீண்டும் அதிமுகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2022ம் ஆண்டு நடந்த ராஜ்யசபா தேர்தலின் போது சி.வி.சண்முகத்திற்கும், ஜெயக்குமாருக்கும் ராஜ்யசபா சீட் கொடுக்க முடிவெடுத்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், தனது ஆதரவாளருக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி கெடுத்தால்தான் நான் கையெழுத்திடுவேன் என ஓ.பன்னீர்செல்வம் பிடிவாதம் பிடித்ததால், வேறுவழியின்றி தர்மருக்கு ‘ராஜ்யசபா எம்.பி. பதவி’ கிடைத்தது. இதனால், ஜெயக்குமாருக்கு ராஜ்யசபா எம்.பி பதவி கிடைக்கவில்லை. இதனால், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் மனவருத்தத்தில் இருந்தார். அதன் பிறகுதான் ‘ஒற்றைத் தலைமை அவசியம்’ என்பதை உணர்ந்து, ஒ.பன்னீரை ஓரங்கட்டினார் எடப்பாடி பழனிசாமி!

ஆனால், இன்றைக்கு அந்த தர்மர் எம்.பி.யே எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொள்ள இருக்கிறார்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal