சமீபத்தில்தான் தலைமறைவு வாழ்க்கையில் இருந்து வெளியே வந்த புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆகியோர் விஜய்யை சந்தித்து ஆலோசனை செய்தனர்.

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிபிஐ விசாரணையை உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிக்கும் என அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதனால் இந்த வழக்கில் மேற்கொண்டு ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் விசாரணை செய்ய முடியாது.கரூர் வழக்கு சிபிஐ விசாரணைக்கு கீழ் சென்றது மிகப்பெரிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. அதிமுக மற்றும் பாஜகவுடன் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வரும் நிலையில்தான் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவாக இருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் மற்றும் இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர், நேற்று கட்சி அலுவலகத்திற்கு வந்தனர். இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மல் குமார், இந்தத் துயரச் சம்பவத்தை அரசியல்மயமாக்கும் எண்ணம் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு இல்லை என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்திப்பதே விஜயின் முக்கிய நோக்கம் என்றும் தெரிவித்தார்.

விஜயின் கரூர் பயணம் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடனான சந்திப்பிற்காக ஒரு தனியார் மண்டபம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பு நடைபெறும் தேதி, இடம் மற்றும் எதிர்பார்க்கப்படும் கூட்டத்தின் அளவு குறித்த விவரங்களை கட்சி சார்பில் கரூர் காவல் கண்காணிப்பாளரிடம் (எஸ்.பி.) தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சந்திப்பு பொதுமக்களுக்கு எந்த வித இடையூறையும் ஏற்படுத்தாத வகையிலும், பங்கேற்பவர்களுக்கு சிரமம் விளைவிக்காத வகையிலும் நடைபெறுவதை உறுதி செய்வதே திட்டம் என்று நிர்மல் குமார் தெரிவித்தார்.

விஜயின் கரூர் விஜய் தொடர்பாக ஆலோசனை செய்த முதல்வர் ஸ்டாலின், நாம் எதையும் தடுக்க கூடாது. விஜய் முறையாக அனுமதி கேட்டால்.. போலீசிடம் கடிதம் கொடுத்தால்.. கண்டிப்பாக முறையாக அனுமதி கேட்டால்.. அனுமதி கொடுங்கள். நாம் எதையும் தடுக்க வேண்டாம். அவர்கள் கேட்கும் கோரிக்கைகளை பாருங்கள். பொதுவாக விதிக்கப்படும் அதே கட்டுப்பாடுகளை மட்டுமே விதியுங்கள். கூடுதல் பாதுகாப்பு கேட்டால் தீபாவளி பாதுகாப்பிற்கு இடையே அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியதாக தெரிகிறது.

த.வெ.க. தலைவர் ஆளும் தரப்பை கடுமையாக விமர்சித்த நிலையிலும், விஜய் தரப்பிற்கு தேவையான பாதுகாப்பை கொடுக்க முதல்வர் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal