மதுரை உயர்நீதிமன்றத் கிளை புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர்.நிர்மல் குமார் ஆகியோரது ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்த நிலையில், இருவரும் மேல்முறையீடு செய்துள்ளனர்.
கடந்த 27ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் கட்சியின் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். இதில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட காவல்துறை 855/25 U/s 105, 110, 125(b), 223 BNS Act & 3 of TNPPDL Act என 5 பிரிவுகளின் கீழ் என்.ஆனந்த் மற்றும் சி.டி.நிர்மல்குமார் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதி செய்திருந்தது.
இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தங்களுக்கு முன்ஜாமீன் வேண்டும் என்று கோரி இருவரும் நீதிமன்றத்தை அணுகியிருந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ஜோதிராமன் மற்றும் தண்டபாணி ஆகியோர் அடங்கிய அமர்வு, ஜாமீன் எல்லாம் தர முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்திருந்தது. எனவே ஆனந்த், நிர்மல்குமார் உள்ளிட்டோர் தலைமறைவாகியுள்ளனர்.
கடந்த 7 நாட்களுக்கும் மேலாக அவர்களை தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்கிற நிலை உருவாகியிருக்கிறது. இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரி இருவரும் மேல்முறையீடு செய்திருக்கின்றனர். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
