மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனத்தை ஓட்டியதாக கரூர் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விஜய்யின் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்யலாமே என சென்னை நீதிமன்றம் கூறியிருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கரூர் வேலுசாமிபுரத்தில் நடந்த விஜய்யின் தவெக பரப்புரை கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றம் தவெக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தது. மேலும் விஜய்யின் பரப்புரை வாகனம் வந்துகொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் மீது மோதியது தொடர்பாகவும் நீதிமன்றம் கருத்து கூறியிருந்தது.
விஜய்யின் பரப்புரை வாகனத்தை ஏன் பறிமுதல் செய்யவில்லை?, ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை என்று நீதிமன்றம் கூறியிருந்தது. இந்த நிலையில் தான் விபத்து கரூர் தவிட்டுபாளையம் பகுதியில் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கரூர் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து, விஜய்யின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். சென்னை பனையூரில் நிறுத்தப்பட்டுள்ள அந்த வாகனம் எந்த நேரத்திலும் பறிமுதல் செய்யப்படலாம் என தெரிகிறது.
