1980, 1990 களில் தமிழகத்தின் உச்ச நடிகையாக இருந்த மீனாவிற்கு பா.ஜ.க.வில் முக்கிய பொறுப்பு வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக தமிழக பா.ஜ.க. புதிய தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லியில் ஜே.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து வருகிறார்.

கடந்த முறை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரை வந்த போது, மாநில அளவிலான நிர்வாகிகள் நியமனத்தை விரைவுபடுத்துமாறு கூறி இருந்தார். இதன்பின் நயினார் நாகேந்திரன் உடனடியாக யார் யாருக்கு மாநில அளவிலான பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும் என்ற பட்டியலை தயார் செய்து, டெல்லி பாஜக தலைமைக்கு அனுப்பி இருந்தார்.

இதன்பின் மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக நடத்தப்பட்ட முருகன் மாநாட்டு பணிகளில் நயினார் நாகேந்திரன் ஈடுபட்டிருந்தார். தற்போது முருகன் மாநாடு முடிவடைந்த நேற்று டெல்லி பயணித்த நயினார் நாகேந்திரன், பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்தார். அப்போது மாநில அளவிலான 28 பதவிகளுக்கான பட்டியல் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் அண்ணாமலை மற்றும் எல்.முருகன் ஆதரவாளர்களையும் இணைக்க வேண்டும் என்று ஏற்கனவே நயினார் நாகேந்திரனுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் தமிழக பாஜகவில் புதிதாக 4 பொதுச்செயலாளர்கள் நியமனம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதன்படி பொதுச்செயலாளர்களாக கேவி ராமலிங்கம், கருப்பு முருகானந்தம், வினோஜ் பி செல்வம் மற்றும் கார்த்தியாயினி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. அதுமட்டுமல்லாமல் நடிகை குஷ்பு மாநில செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். இவருக்கு கூடுதலாக மாநில அளவிலான பொறுப்பு வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியது.

நடிகை மீனாவுக்கும் மாநில அளவிலான பொறுப்பு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது. மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வீட்டில் நடந்த பொங்கல் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்ட போது, நடிகை மீனாவும் பங்கேற்றிருந்தார். சில நாட்களுக்கு முன் துணை குடியரசுத் தலைவரையும் சந்தித்திருந்தார்.

இதனால் மீனாவுக்கு இம்முறை மாநில அளவிலான பொறுப்பு நிச்சயம் என்று பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் நடிகர் சரத்குமாருக்கு மாநில அளவிலான பதவி அளிக்க பாஜக முடிவு செய்திருந்தது. ஆனால் சரத்குமார் தேசிய அளவிலான முடிவை எதிர்பார்ப்பதால், பாஜக தலைமை காத்திருக்க அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal