போதை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் ஸ்ரீகாந்துத்கு முதலாம் வகுப்பு சிறைக்கு அனுமதி அளித்து சென்னை எழும்பூர் 14ஆவது பெருநகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பாரில் நடந்த அடிதடி வழக்கில் அதிமுக ஐடி பிரிவு முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவர் கைது செய்யப்பட்டார். அவருடைய செல்போனை பறிமுதல் செய்த காவல் துறையினர் அதில் உள்ள வாட்ஸ் ஆப் தகவல்களை ஆய்வு செய்தனர்.

அப்போது அவருக்கு போதைப் பொருள் சப்ளை செய்த பிரதீப் என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அவர் கூறுகையில், நடிகர் ஸ்ரீகாந்த், தீங்கரை என்ற படத்தில் நடித்து வருவதாகவும் இந்த படத்தை பிரசாத்தான் தயாரித்து வருகிறார்.

பிரசாத், ஸ்ரீகாந்துக்கு போதை பொருள் தேவைப்படுவதாகக் கூறி என்னிடம் இருந்து கொக்கைனை வாங்கிச் சென்றதாக பிரதீப் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து நடிகர் ஸ்ரீகாந்தை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.அப்போது அவர் உண்மையிலேயே போதை பொருளை பயன்படுத்தினாரா என்பதை அறிவியல்பூர்வமாக அறிய அவரது ரத்த மாதிரிகளை சோதனைக்கு அனுப்பினர். இதில் நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருளை பயன்படுத்தியது உறுதியாக தெரிந்தது.

இதையடுத்து போலீஸார் ஸ்ரீகாந்தை நேற்றைய தினம் கைது செய்தனர். அப்போது அவர் இந்த வழக்கில் 3ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். அவர் 14 ஆவது பெருநகர நீதிபதி முன்பாக நடிகர் ஸ்ரீகாந்த் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நடிகர் ஸ்ரீகாந்தை அடுத்த மாதம் 7ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்து வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

ஸ்ரீகாந்த் 40 முறை போதைப் பொருளை வாங்கி இருப்பதாக தெரிகிறது. அதற்காக பிரதீப்புக்கு நடிகர் ஸ்ரீகாந்த் ஜிபே மூலம் ரூ 4.72 லட்சம் பணத்தை அனுப்பியதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் தான் வாங்கிய போதை பொருளை யாருக்கும் விற்பனை செய்யவில்லை என்றும் தான் மட்டுமே பயன்படுத்தியதாகவும் நடிகர் ஸ்ரீகாந்த் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் ஸ்ரீகாந்துக்கு முதல் வகுப்பு சிறைக்கு அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதல் வகுப்பு சிறையில், கட்டில், தலையணை, கூடுதல் விளக்குகள், படிக்க செய்தித்தாள்கள், மருத்துவ சிகிச்சை, மருத்துவரின் பரிந்துரைப்படி உணவு வழங்கப்படும்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal