அடித்தட்டு மக்களின் அவல வாழ்க்கையை ஆட்சியாளர்கள் நேரில் பார்த்தால்தான் அவர்களுக்கு ‘விடியல்’ பிறக்கும். ஆனால், அலங்காரத்திரையின் முலம் அவலங்களை மறைப்பது எந்தவிதத்தில் நியாயம் என கேள்வி எழுந்துள்ளது.
சென்னை சேப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் துணை முதல்வர் உதயநிதி கலந்துகொள்ள சென்றபோது, ஒருபுறம் பக்கிங்காம் கால்வாய் இருப்பதையும், மறுபுறம் குடிசைகள் இருப்பதையும் மறைக்கும் வகையில் அலங்காரத் திரை அமைக்கப்பட்டது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னையில் உள்ள கூவம், பக்கிங்காம் கால்வாய்களை சுத்தப்படுத்த ஆண்டுதோறும் நிதி ஒதுக்கப்படுகிறது. அந்த நிதி எங்கே போகிறது என்பது விடைகாண முடியாத கேள்வி. குடிசைப் பகுதிகளை அடுக்குமாடி குடியிருப்புகளாக மாற்றுவதற்கு உருவாக்கப்பட்டுள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் திட்டங்களை அதிகப்படுத்தி, கூடுதல் நிதி ஒதுக்கி குடிசைகளில் வசிப்பவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதும், சுகாதாரமற்ற நீர்வழித்தடங்களை சுத்தமாக்க திட்டங்கள் வகுத்து,கண்டிப்புடன் செயல்படுத்துவதும் மட்டுமே இப்பிரச்சினைகளுக்கு தீர்வாக இருக்க முடியுமே தவிர, அலங்காரத் திரை கொண்டு மறைத்தல் எந்த வகையிலும் தீர்வாகாது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்!
இதற்கிடையே, கடந்த மே 31ம் தேதி மதுரைக்கு முதல்வர் ஸ்டாலின் சென்ற போது, அவர் செல்லும் வழியில் இருந்த பந்தல்குடி கழிவு நீர் கால்வாய் அலங்காரத் துணி கொண்டு மறைக்கப்பட்ட சம்பவம் விமர்சனத்தை கிளப்பியது. பின்னர் அலங்காரத் துணி அகற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சுத்தம், சுகாதாரமற்ற நிலையில் ஓடிக் கொண்டிருக்கும் கால்வாயும், ஏழை, எளிய மக்கள் வசிக்கும் குடிசைப் பகுதியும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் கண்களில் பட்டுவிடக் கூடாது என்று திரையிட்டு மறைப்பது என்ன நியாயம்?