அமைச்சர் எ.வ.வேலுவுக்கு பண மாலை அணிவித்த த.வெ.க. நிர்வாகி, அக்கட்சித் தலைமைக்கு மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதியதுதான் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தெற்கு மாவட்டச் செயலாளர் பாரதிதாசன் வீட்டு புதுமனை புகுவிழா நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்றார். இந்த நிகழ்வில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவும் பங்கேற்றிருந்தார்.

அமைச்சர் எ.வ.வேலுவுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு தான் திருவண்ணாமலை அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது. தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு மரியாதை அளிக்கப்பட்டதை விட அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தான் பிரமாண்ட மரியாதை வழங்கப்பட்டுள்ளது. உச்சகட்டமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளர் பாரதிதாசன், அமைச்சர் எ.வ.வேலுவுக்கு ரூ.500 நோட்டுகளால் செய்யப்பட்ட மாலையை அணிவித்தார்.

இது தவெக நிர்வாகிகள், தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பாரதிதாசன் தவெக மாவட்ட செயலாளரா அல்லது திமுக நிர்வாகியா என வியக்கும் அளவுக்கு அவரது செயல்பாடுகள் இருந்துள்ளன. தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் பாரதிதாசன் மற்றும் அவரது குடும்பத்தினர் அமைச்சர், திமுக எம்.பி ஆகியோருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிலேயே, தனது அரசியல் எதிரி திமுக தான் என்று தவெக தலைவர் விஜய் வெளிப்படையாக அறிவித்திருந்தார். மேலும், அனைத்து கட்சி நிகழ்வுகளிலும், திமுக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார் விஜய்.

இந்த நிலையில், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக செயலாளர் பாரதிதாசன், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு அளித்த மரியாதையை விட கூடுதலாக திமுக அமைச்சருக்கு மரியாதை அளித்து, நெருக்கம் பாராட்டியது கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அமைச்சர் எ.வ.வேலுவுக்கு பண மாலை போட்டு வரவேற்பு அளித்த தவெக திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளர் பாரதிதான், விஜய்க்கு மன்னிப்புக் கடிதம் எழுதியுள்ளார். இனிவரும் காலங்களில் என் சம்பந்தப்பட்ட விழாக்களில் நம் கழக சொந்தங்கள் தவிர வேறு எந்த மாற்றுக்கட்சி நிர்வாகிகளையும் அழைக்க மாட்டேன் என பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal