ஏற்கனவே குவாரி விவகாரத்தில் அமைச்சர் கே.என்.நேரு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை வைத்த ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ., பழனிசாமி, தற்போது அமைச்சர் கே.என்.நேரு மீது மீண்டும் பகீர் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்.

திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி,திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாவட்ட வளர்ச்சி குறித்து பேசினர்.

அப்போது ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி பேசுகையில், ‘‘திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட கண்ணுடையான்பட்டி சமுத்திர பாலம் கட்டுவதற்கு வந்த திட்டம் மன்னச்சநல்லூர் பகுதிக்கு கொடுத்துவிட்டனர். எங்கள் அமைச்சர் மீது வருத்தம் வந்ததே இதன் காரணமாகத்தான். அந்தந்த தொகுதிக்கு என்ன வருகிறதோ அதை செய்யுங்கள். அடுத்தவர் சாப்பாட்டை எடுத்து மற்றவர்களுக்கு கொடுக்காதீர்கள். இந்த பாலம் வேறு தொகுதிக்கு சென்றதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்’’ என்றார்.

‘அடுத்தவர் சாப்பாட்டை அமைச்சர் கே.என்.நேரு அபகரித்தார்’ என்ற தொணியில் தி.மு.க. எம்.எல்.ஏ.வே அமைச்சர் மீது குற்றச்சாட்டு வைத்திருப்பதுதான் அறிவாலயத்தில் புயலைக் கிளப்பியிருக்கிறது.

தவிர, மண்ணச்சநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ., கதிரவன் பெரம்பலூரைச் சேர்ந்தவர். கே.என்.நேருவின் சமுதாயமான ரெட்டியார் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், ‘கல்வித் தந்தை’யாக இருப்பதாலும், முத்தரையர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் போட்டியிட வைத்ததன் பின்னணியில் கே.என்.நேரு இருப்பதாக தகவல்கள் வெளியாகியது.

இந்தப் பின்னணியில் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு வந்த பாலத்தை, கே.என்.நேரு மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு கொண்டு சென்றுவிட்டார் என்ற எம்.எல்.ஏ.வின் குற்றச்சாட்டையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்கிறார்கள் மலைக்கோட்டைப் பகுதி மக்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal