‘2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் அமையும்’ என மத்திய உள்துறை அமித்ஷா அடித்துப் பேசியதுதான் எடப்பாடி பழனிசாமி உள்பட அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகளை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
மதுரையில் அமித் ஷா பேசியது, தி.மு.க.வின் வயிற்றில் புளியைக் கரைத்ததோடு, கூட்டணியில் உள்ள அ.தி.மு.க.வையும் அதிர வைத்திருக்கிறது என்பதுதான் உண்மை.
‘தமிழகத்தில் ஊழல் ஆட்சி அகற்றப்படும்… டெல்லியைப் போல் தமிழகத்திலும் பா.ஜ.க. ஆட்சி அமையும்’ என ஆணித்தரமாக அமித்ஷா பேசியது தி.மு.க.வினரை யோசிக்க வைத்திருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்கள் இருக்கும் நிலையில் விசாரணை அமைப்புகள் தி.மு.க. தலைமைக்கே நெருக்கடி கொடுக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகமாகியிருக்கிறது. காரணம், டாஸ்மாக்கில் அமலாக்கத்துறையே ஆயிரம்கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது என்று கூறிய நிலையில், அமித் ஷா, ‘35 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருக்கிறது டாஸ்மாக்கில்’ என கூறியிருக்கிறார். இந்த விவகாரம்தான் தி.மு.க. தலைமையின் வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்திருக்கிறது.
இது பற்றி தமிழக அரசியல் பார்வையாளர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘சார், மதுரையில் பேசிய பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா 2026 அதிமுக பாஜக கூட்டணி ஆட்சி தான் என உறுதிப்பட பேசி இருக்கிறார். கூட்டணி ஆட்சி அமைக்குமா? அல்லது கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஆட்சி அமைக்குமா? என்பதுதான் தற்போதைக்கு பேசுபொருளாக இருக்கிறது. அமித்ஷாவின் பேச்சு எடப்பாடி பழனிச்சாமியை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கும் நிலையில், சில சீனியர்களையும் அதிருப்தியடைய வைத்திருக்கிறது. வழக்குகளில் சிக்கியிருக்கு சில சீனியர்களைத் தவிர, மற்றவர்கள் இதைக் காரணமாக வைத்து அ.தி.மு.க. & பா.ஜ.க. கூட்டணி வேண்டாம் என எடப்பாடிக்கு தற்போது அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.
2021ல் இருந்த அதே கூட்டணியே 2026 தேர்தலிலும் தொடரும் எனது பார்க்கப்படுகிறது. கடந்த முறை கொடுத்ததை விட காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு குறைவாக சீட்டுகளை கொடுத்து அதிக தொகுதிகளை திமுக போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சில கட்சிகளை உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வைக்கவும் ஆலோசனை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
இப்படியாக புயல் வேகத்தில் திமுக பணியாற்றிக் கொண்டிருக்க, அதிமுகவும் தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்தி உள்ளது. பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைந்திருக்கிறது. அதிமுக தலைமையில் தான் ஆட்சி என எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக சொல்ல, பாஜகவோ கூட்டணி ஆட்சி என சொல்லி வருகிறது. குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரைக்கு வந்திருந்தார் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் இறுதியாக, நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார். அதில் அதிமுகவிடம் அதிக சீட்டுகளை கேட்டு பெற வேண்டும் என ஒரு நிர்வாகி சொல்ல அதிக சீட்டுகளை வாங்கி என்ன செய்யப் போகிறோம், குறைவான சீட்டுகளை வாங்கினாலும் அதில் ஜெயிக்க வேண்டும் என சிந்தியுங்கள் என வாயடைக்க வைத்துவிட்டாராம்.
அதே நேரத்தில் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் எனக் கூறியிருக்கிறார். இதுதான் தற்போது பிரச்சினையை கிளப்பிவிட்டிருக்கிறது. அதாவது கூட்டணி ஆட்சி அமைக்குமா அல்லது கூட்டணி கட்சிகள் சேர்ந்து ஆட்சி அமைக்குமா? என்ற விவாதத்தை கிளப்பி இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக அதிமுக ஆகிய கட்சிகள் தான் ஆட்சி அமைத்திருக்கின்றன. கூட்டணி கட்சிகளுக்கு எம்எல்ஏ சீட்டுகள் ஒதுக்கப்படுவதோடு சரி, சில நேரங்களில் வாரிய தலைவர் உள்ளிட்ட பதவிகள் வழங்கப்படுவது வழக்கம்.
ஆனால் தற்போது பாஜக கூட்டணி ஆட்சி என்ற வார்த்தையை முன் வைத்திருப்பது அதிமுகவினரை கொந்தளிக்க வைத்துள்ளது. ஜெயலலிதா எம்ஜிஆர் இருந்தவரை இது போன்ற பேச்சுகளே இல்லாத நிலையில் எடப்பாடி பழனிச்சாமி இருக்கும்போது கூட்டணி ஆட்சி என்ற வார்த்தை பிரயோகத்தை பாஜக பயன்படுத்துவதை அவர் விரும்பவில்லை என சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் சில சீனியர்கள் பாஜகவின் இந்த நகர்த்தலால் உற்சாகம் அடைந்திருக்கின்றனர். பாஜக நிர்வாகிகள் அல்ல.. அதிமுக நிர்வாகிகள். பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சியோடு கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கலாம் என சில நிர்வாகிகள் தற்போது வரை எடப்பாடி பழனிச்சாமியை வற்புறுத்தி வருகின்றனர்.
ஆனால் வேறு வழியின்றி தான் பாஜக கூட்டணிக்கு எடப்பாடி பழனிச்சாமி ஒப்புக்கொண்டார். கடந்த தேர்தலில் பாஜக கூட்டணி காரணமாக வலுவாக இருந்த சில அமைச்சர்கள் கூட தோல்வியை சந்தித்து எம்.எல்.ஏ ஆகக் கூட முடியாமல் போனது. தற்போது பாஜக கூட்டணி அமைந்தால் தங்களுக்கு அரசியல் வாழ்வு அஸ்தமனம் ஆகிவிடும் என்பதால் பாஜக கூட்டணியை எப்படியாவது உடைத்து விட வேண்டும் என பிளான் செய்து வருகின்றனர்.
தற்போது கூட்டணி ஆட்சி என்ற வார்த்தையை பாஜக உபயோகப்படுத்தி இருக்கும் நிலையில் இதை சாக்காக வைத்து எடப்பாடி பழனிச்சாமியை தூண்டி கூட்டணியை உடைத்து விடலாம். தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து போட்டியிட்டால் ஆட்சியையே உறுதியாகப் பிடித்துவிடலாம் எனக் கூறிவருகின்றனர். கடைசி கட்டத்தில் எடப்பாடி பழனிசாமி எந்த முடிவை எடுப்பார் என்பதை யாராலும் கணிக்க முடியாது. எதுவும் நடக்கலாம்’’ என்றனர்.
அமித் ஷாவின் பேச்சிற்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகளின் மனக்கசப்பை த.வெ.க. தலைவரும் கூர்ந்து கவனித்து வருகிறார்.