மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாஜகவின் தேர்தல் பணிகள் ஆலோசனைக்காக இன்று மதுரை வரும் நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வன் உடனான சந்திப்பு நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. அந்த வகையில் பாஜகவும் தமிழ்நாடு பக்கம் கவனத்தை திருப்பி இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் சென்னை வந்த மத்திய உள்துறை அமித் ஷா, அதிமுக – பாஜக கூட்டணியை உறுதி செய்து அறிவித்தார்.

அப்போது அமித் ஷா சென்னை வந்த போது, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோரை சந்திக்கவில்லை. அந்த நேரத்தில் டிடிவி தினகரன் மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இதன்பின் பாஜகவினர் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் என்டிஏ கூட்டணியில் தொடர்வதாக கூறி வருகின்றனர்.

ஆனால் தமிழ்நாட்டில் என்டிஏ கூட்டணிக்கு தலைமை வகிக்கும் எடப்பாடி பழனிசாமியோ அல்லது அதிமுக நிர்வாகிகளோ இதுதொடர்பாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இதனால் அமமுக மற்றும் ஓபிஎஸ் உள்ளிட்டோரின் ஆதரவாளர்களுக்கு பாஜக உடன் கூட்டணியில் இருக்கிறோமா என்பதில் சந்தேகமாக இருக்கின்றனர்.

இந்த நிலையில் தேர்தல் பணிகள் தொடர்பான ஆலோசனைக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மதுரை வருகிறார். இதற்காக பாஜக சார்பாக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணிகளில் சுமார் ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று இரவு மதுரை வரும் அமித் ஷா, நாளை பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

அதேபோல் மாலையில் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார். அதற்கு இடையில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அமித் ஷாவை சந்திக்க ஓபிஎஸ் தரப்பில் நேரம் கேட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் பாஜக தரப்பில் இதுவரை நேரம் ஒதுக்கப்படவில்லை.

ஓ-பிஎஸ்ஸுடன் தமிழக பா.ஜ.க. காட்டி வரும் இணக்கத்தை ‘மேலிடம்’ காட்டாமல் இருப்பதுதான் அவருக்கு ‘தர்மசங்கடத்தை’ ஏற்படுத்தியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal