சட்டமன்றத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக்காக ஜூன் 8ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை மறுநாள் வரவுள்ளார். கடந்த முறை வந்த போது அதிமுக – பாஜக கூட்டணியை உறுதி செய்தார். இதனால் இம்முறை தென் மாவட்ட நிர்வாகிகளை சந்திப்பதற்காக அமித் ஷா திட்டமிட்டிருக்கிறார். அமித் ஷா வருகையையொட்டி மதுரை ஒத்தக்கடை பகுதியில் பாஜக பொதுக்கூட்டம் நடக்கவுள்ளது.
அதற்கான ஏற்பாடுகளை பாஜகவினர் மேற்கொண்டு வருகின்றனர். மதுரை வரும் அமித் ஷா, தென் மாவட்டங்களில் பாஜக போட்டியிடும் தொகுதிகளை உறுதி செய்வார் என்று சொல்லப்படுகிறது. அதேபோல் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே ஆடிட்டர் குருமூர்த்தி நேற்று பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார். இதனால் அமித் ஷா வரும் போது அன்புமணி ராமதாஸ் உடன் சந்திப்பு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாமக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதனால் இம்முறையும் அந்த கூட்டணியை தக்க பாஜக விரும்புவதாக தெரிகிறது.
ஏற்கனவே, ‘கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது அதிமுகவுடன் பா.ம.க கூட்டணி வைத்திருந்தால் பா.ம.க. 3 இடங்களிலும் அ.தி.மு.க. ஆறேழு இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கும். என் காலில் விழுந்து பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க சம்மதத்தைப் பெற்றார் அன்புமணி’ என வெட்ட வெளியில் டாக்டர் போட்டுடைத்ததுதான் பா.ஜ.க. வை அதிர வைத்தது.
இந்த விவகாரம்தான் பா.ஜ.க.விற்கு உள்ளுக்குள் உதறலை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. இந்த நிலையில்தான் சைதை துரைசாமியின் வாயிலாக டாக்டரிடம் சந்திக்க நேரம் கேட்டு அனுமதி வாங்கியிருக்கிறார் ஆடிட்டர் குருமூர்த்தி!
அந்த சந்திப்பில் என்ன நடந்தது என்பது பற்றி தைலாபுரம் வட்டாரத்தில் பேசினோம். ‘‘சார், ஆடிட்டரும், சைதையும் ஐயாவை சந்திக்கும் முன்பு அன்புமணி சந்தித்திருக்கிறார். அப்போதே தந்தைக்கும், மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதனை அன்புமணியின் மூன்றாவது மகளும், தாயார் சரஸ்வதியும்தான் சமாதானப்படுத்தியிருக்கிறார்கள். சமரச முடிவு முழுமையாக எட்டப்படாமலேயே அன்புமணி அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
அதன் பிறகுதான் ஆடிட்டர் குருமூர்த்தியும், சைதை துரைசாமியும் தோட்டத்திற்குள் நுழைந்திருக்கிறார்கள். அப்போது ஆடிட்டர் குருமூர்த்தி கூட்டணி தொடர்பாக சில விஷயங்களை பேசியபோது, ‘இன்னும் காலங்கள் இருக்கிறதே… அதற்குள் கூட்டணிக்கு என்ன அவசரம்?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார் டாக்டர். அருகில் இருந்த துரைசாமியோ என்ன செய்வது என்று தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டிருந்திருக்கிறார். இவர்கள் இருவரும் சென்றும் டாக்டர் சமாதானப் படவில்லை. அவர் ஒரே முடிவில் இருக்கிறார். ‘தலைவர் நான்… செயல் தலைவர் அன்புமணி… கட்சியில் இருந்து நீக்கவோ… சேர்க்கவோ… எனக்குத்தான் அதிகாரம் இருக்கிறது. கூட்டணி தொடர்பாகவும் நான்தான் முடிவெடுப்பேன்’ என்பதில் ஐயா தெளிவாக இருக்கிறார்’’ என்றனர்.
‘‘போயும் போயும்… ஆடிட்டரைப் போய் சமாதானப்படுத்த பி.ஜே.பி. மேலிடம் அனுப்பியிருக்கிறதே… அ.தி.மு.க.வில் இன்றைக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமைக்கு காரணம் ஆடிட்டர்தான். இதை அவரே ஒப்புக்கொண்டிருக்கிறார். அதாவது ஓ.பி.எஸ்.ஸை தர்மயுத்தம் நடத்தச் சொன்னவரே ஆடிட்டர்தான். இன்றைக்கு அ.தி.மு.க.வில் ஒ.பி.எஸ்.ஸால் இணையமுடியவில்லை. இந்த நிலையில் ஆடிட்டிர் புகுந்த வீடும்… ஆ… புகுந்த வீடும் ஒன்று… தந்தை & மகன் சமரசம் நடக்குமா என்பதே மில்லியன் டாலர் கேள்வி’’ என அ.தி.மு.க. தரப்பில் இருந்து இந்த முணுமுணுப்புகள் எழுந்திருக்கிறது.
ஆக மொத்தத்தில் ஆடிட்டருக்கு ‘நோஸ்கட்’ கொடுத்து அனுப்பியிருக்கிறார் டாக்டர் ராமதாஸ்!