கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இரண்டு கட்டமாக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்களின் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடக்கும் குறைகளை அந்தந்த நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார். அந்த வகையில் ‘திருச்சி மாவட்டத்தில் இதே நிலை நீடித்தால் மீண்டும் 9 தொகுதிகளையும் தி.மு.க. கைப்பற்றிவிடும் என எனக்கு தகவல்கள் வந்திருக்கிறது’ என மா.செ.க்களிடம் எடப்பாடி பழனிசாமி கோபத்துடன் எச்சரித்திருக்கிறார்.
இது பற்றி அ.தி.மு.க. தலைமைக்கழக நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.
‘‘சார், பல மாவட்டங்களில் உட்கட்சிப் பூசல், தி.மு.க.வுடன் ரகசிய உறவுகள் இருந்தாலும் திருச்சி மாவட்டத்தில்தான் அதிகம். காரணம், அங்குதான் ‘மலைக்கோட்டை மன்னர்’ இருக்கிறார். இவரிடம் விலைபோகாதவர்கள் யார் என்கிறார்கள்!
அதே போல் திருச்சி புறநகர் வடக்கு மாட்டத்தில் உள்ள அ.தி.மு.க. நிர்வாகிகள் மன்னரிடம் ரகசிய உறவில் இருக்கிறார்களாம். உதாரணம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மன்னருக்காக எடப்பாடி பழனிசாமியையே ‘பொ.செ.வா? மயி… செ.வா? என பேசிய நிர்வாகியை எடப்பாடி பழனிசாமி கட்சியை விட்டு நீக்கினார். இந்தளவிற்கு மன்னருடன் தொடர்பில் இருக்கிறார்கள்.
தவிர, மாநகர் மா.செ. மீது வட்டச் செயலாளர்கள் பலர் எடப்பாடி பழனிசாமியிடம் புகார் கொடுத்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. காரணம், ‘தங்கத்தின்’ செல்வாக்கு இருக்கும்மட்டும் நமக்கு பயமில்லை என அந்த நிர்வாகி துணிச்சலுடன் இருக்கிறாராம்.
இந்த நிலையில்தான் மா.செ.க்கள் கூட்டத்தில் திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி மற்றும் சீனிவாசன் ஆகியோரை எச்சரித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி’’ என்றனர்.
எடப்பாடி பழனிசாமியின் எச்சரிக்கைக்குப் பின், திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட மண்ணச்சநல்லூர் ஒன்றிய நிர்வாகிகளை அழைத்து எச்சரித்திருக்கிறார் மா.செ. மு.பரஞ்சோதி. இது பற்றி அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.
‘‘சார், நேற்று மண்ணச்சநல்லூர் அ.தி.மு.க.வின் ஒ.செ.க்கள் மற்றும் பேரூராட்சி நிர்வாகிகளை அழைத்துப் பேசினார் பரஞ்சோதி. அப்போது பேசிய அவர், ‘‘ நீங்கள் சரியாக கட்சி வேலையைப் பார்க்காமல் தி.மு.க.வுடன் உறவில் இருப்பதாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்னிடம் எச்சரித்திருக்கிறார்.
என்னுடைய பதவியை காப்பாற்றிகொள்வதே பெரும் பாடாக இருக்கிறது. நீங்கள் கட்சிக்கு விசுவாசமாக இல்லாவிட்டால் உங்கள் பதவி பறிக்கப்படும். அதன் பிறகு என்மீது நீங்கள் கோபப்பட்டு பிரயோஜனம் இல்லை’’ என்று எச்சரித்திருக்கிறார்.
உதாரணமாக ஒரு விஷயத்தைச் சொல்லவேண்டும் என்றால், கடந்த சட்டமன்றத் தேர்தலில் மண்ணநல்லூர் தொகுதியில் வாக்குக்கு ரூ.300 கொடுத்த போது சுமார் 56 ஆயிரம் ஓட்டுக்களைப் பெற்றார் பரஞ்சோதி. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குக்கு பணம் கொடுக்காமலேயே என்.டி.சந்திரமோகன் 43 ஆயிரம் வாக்குகள் பெற்றார்.
இதற்கு காரணம், இங்குள்ள முத்தரையர் மக்கள். சமுதாயப் பற்றோடு வாக்களித்து அ.தி.மு.க.வை நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டாம் இடத்திற்கு கொண்டு வந்தனர். இங்கு முத்தரையர் சமுதாயத்தினர்தான் வெற்றி தோல்வியை தீர்மானிப்பவர்களாக இருந்தாலும், ஒ.செ.க்கள் யாரும் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இல்லை.
காரணம், இங்கு முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மா.செ.க்களாக அடுத்தடுத்து வந்தாலும், எந்தவொரு முத்தரையரையும் ஒ.செ.வாக நியமிப்பது கிடையாது. காரணம், ‘நமக்கு போட்டியாக வந்துவிடுவார்களோ?’ என இதற்கு முன்பு இருந்தவர்களும் சரி, இப்போது இருப்பவர்களும் சரி, முத்தரையை ஒ.செ.வாக நியமிக்க தயங்குகிறார்கள். இதுதான் அ.தி.மு.க. அடிவாங்குவதற்கு முதல் அடிப்படை காரணம்!
எனவே, எடப்பாடி பழனிசாமி, திருச்சி புறநகர் மாவட்டம் முழுவதிலும் உள்ள செயல்படாத ஒ.செ.க்களை மாற்றினால்தான் 2026ல் 9 தொகுதிகளில் ஒரு சில தொகுதிகளிலாவது அ.தி.மு.க. வெற்றி பெறும்’’ என்றனர்