“ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்று அவசர, அவசரமாக இந்த வழக்கை முடிக்க திமுக அரசு முனைந்தது ஏன்? ‘சார்’ஐ காப்பாற்றியது யார் ? இந்த கேள்விகள் கேள்விகளாகவே நீண்ட நாட்கள் இருக்காது. ஸ்டாலின் சாரே நினைத்தாலும், அந்த ‘சார்’ஐ எந்த சாராலும் காப்பாற்ற முடியாது.” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் இன்று காலை தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. அதில் குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எந்தவித தண்டனைக் குறைப்புமின்றி ஞானசேகரன் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் தண்டனை விவரம் வெளியான சில நிமிடங்களில் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்று அவசர, அவசரமாக இந்த வழக்கை முடிக்க திமுக அரசு முனைந்தது ஏன்? ‘சார்’ ஐ காப்பாற்றியது யார் ? இந்த கேள்விகள் கேள்விகளாகவே நீண்ட நாட்கள் இருக்காது. ஸ்டாலின் சாரே நினைத்தாலும், அந்த ‘சார்’ஐ எந்த சாராலும் காப்பாற்ற முடியாது.” என்று பதிவிட்டிருந்தார்.

அந்தப் பதிவின் முழு விவரம்: அண்ணா பல்கலை. பாலியல் வழக்கின் குற்றவாளியான திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது சென்னை மகளிர் நீதிமன்றம். இந்த வழக்கில் குற்றவாளி திமுக ஞானசேகரனைக் காப்பாற்ற எத்தனையோ சித்து வேலைகளை செய்தது ஸ்டாலின் மாடல் திமுக அரசு.

அத்தனையும் முறியடித்து, மக்கள் மன்றம் முதல் சமூக ஊடகங்கள் வரை தனது தொடர் போராட்டத்தால் இந்த வழக்கின் குற்றவாளிகளில் ஒருவனான திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு தண்டனையை சாத்தியப்படுத்தியுள்ளது அதிமுக.

பாதிக்கப்பட்ட மாணவியின் குரலாக அஇஅதிமுக தொடர்ந்து ஒலிக்கும் என்ற வாக்குறுதியை இன்றுவரை நிறைவேற்றி வருகிறோம். அதனால் தான் #யார்அந்த‘சார்’ என்ற முழுமையான நீதிக்கான கேள்வியை இன்றும் கேட்கிறோம்.

எஃப்.ஐ.ஆரில் ல் குறிப்பிடப்பட்ட அந்த சார் யார்? விசாரணையின் போதே அந்த ‘சார்’ ரூல்டு அவுட் செய்யப்பட்டது ஏன்? எதற்காக ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்று அவசர அவசரமாக இந்த வழக்கை முடிக்க முனைந்தது திமுக அரசு? ‘சார்’ஐ காப்பாற்றியது யார் ? இந்த கேள்விகள் கேள்விகளாகவே நீண்ட நாட்கள் இருக்காது. அதிமுக ஆட்சி அமைந்ததும், அனைத்து பதில்களும் கிடைக்கத் தான் போகிறது. ஸ்டாலின் சாரே நினைத்தாலும், அந்த ‘சார்’ -ஐ எந்த சாராலும் காப்பாற்ற முடியாது!. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையே தமிழக கம்யூனிஸ்ட் கட்சியினரும், ‘எஃப்.ஐ.ஆர். கசிவு தொடர்பாகவும் நடவடிக்கை தேவை’ என வலியுறுத்தி வருகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal