அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த ஞானசேகரன் குற்றவாளி என்று சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஞானசேகரன் மீதான 11 பிரிவுகளின் கீழும் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. இவருக்கான தண்டனை விவரங்கள் ஜூன் 2ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வரவேற்றுள்ளார். இதுகுறித்து தனது பக்கத்தில், நாட்டையே உலுக்கிய அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில், நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் அதிமுக தொடர்ந்து போராட்டம் நடத்தி, மாணவியின் குரலாக மக்கள் மன்றத்தில் ஒலித்து வந்தது.

தொடர் முன்னெடுப்புகளின் ஊடாக, தன்னிடம் வழங்கப்பட்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள் அடிப்படையில் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இருப்பினும், மக்கள் மன்றத்தில் இந்த வழக்கு குறித்து, ஸ்டாலின் மாடல் அரசு மீது நிலவும் முக்கியமான கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.

இந்த வழக்கில் முதலில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் உடனடியாக விடுதலை செய்யப்பட்டது ஏன்? விடுதலை மற்றும் மீண்டும் கைதுக்கு இடையில் என்ன நடந்தது? ஞானசேகரன் வீட்டு படுக்கையறையில் அமர்ந்து பிரியாணி சாப்பிடும் அளவிற்கு நெருக்கமாக இருந்த ஸ்டாலின் அரசின் அமைச்சர் மற்றும் சென்னை துணை மேயர் இந்த வழக்கில் விசாரிக்கப்படாதது ஏன்?

SIT-ல் பணியாற்றிய டிஎஸ்பி ராகவேந்திரா ரவி ராஜினாமா செய்தது ஏன்? உயர் அதிகாரிகள் அழுத்தம் என்று வந்த செய்திகளுக்கு என்ன விளக்கம்?இவை எல்லாவற்றையும் விட மிக மிக முக்கியமான, இந்த வழக்கின் மூலக் கேள்வியான யார் அந்த ஷிமிஸி ? என்ற கேள்வி, இன்னும் அப்படியே இருக்கிறது!

வழக்கு விசாரணையின் முதற்கட்டம் முடிவதற்குள்ளேயே, ஞானசேகரன் தவிர இந்த வழக்கில் யாரும் குற்றவாளி இல்லை என்று எதற்காக ஸ்டாலின் அரசின் காவல்துறை அவசர அவசரமாக பிரஸ் மீட் கொடுக்க வேண்டும்? யாரைக் காப்பாற்ற இந்த வேகம்? பாதி நீதியால் தப்பித்துவிடலாம் என்று எண்ணினால், அந்த எண்ணம் ஒருபோதும் ஈடேறாது!

காலம் மாறும் ! காட்சிகள் மாறும் ! விரைவில் அதிமுக ஆட்சி அமையும். அந்த SIR “யாராக இருந்தாலும்”, கூண்டேற்றட்டப்படுவார்! SIR-ஐக் காக்கும் சார்-களையும் உடன் ஏற்றி ,அவர்களும் நாட்டுக்கு அடையாளம் காட்டப்படுவர் என்று பதிவிட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமியின் பதிவை அக்கட்சியினர் பலரும் பகிர்ந்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal