தமிழக அரசியல் களத்தில் பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் சேவைகளிலும், கட்சி நிகழ்ச்சிகளிலும் களத்தில் நிற்பவர்தான் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா!

முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா தனது வலைதளப் பக்கத்தில்,

‘‘கடன் பட்டார் நெஞ்சம் போல…’’ என்ற தலைப்பில் பதிவிட்ட பதிவுதான் அனைவரையும் நெகிழ வைத்திருக்கிறது.

அவர் தனது வலைதளப் பதிவில், ‘‘நேற்று சௌந்தராஜன் அவர்கள் மகன் இளவல் ராபின் அவர்களின் மணவிழாவில் ஆலங்குளத்தில் கலந்து கொண்ட நெகிழ்வான தருணம்.

என் தந்தையின் உயிரை காப்பாற்ற போராடி தன் உயிரை இழந்தவர் ஆசிரியர் பொன்ராஜ் சார் அவர்களின் தம்பி சௌந்தராஜன். அவர் குடும்பத்தினரை சந்திக்கும் தருணங்களில் இனம் புரியாத சோகம் நெருடல் என்னை ஆட்கொள்ளும். மனிதன் தோன்றிய நாள் முதல் வஞ்சகம், வெறுப்பு, நம்பிக்கை துரோகம் உருவாகியது என்பதே நிதர்சனம்! அதன் வீரியம் அதிகரித்து வருகிறேதே என்பதே ஒரு சோகமான நிதர்சனம்.

பொன்ராஜ் ஆசிரியர் போன்றவர்கள் அதிசிய பிறவி! அவரின் தியாகம் எங்களால் என்றுமே ஈடுசெய்ய முடியாது.
‘‘நன்றிகடன் மட்டுமே!’’ என பதிவிட்டிருக்கிறார்.

இந்தப் பதிவுதான் அவரது ஆதரவாளர்களை மிகவும் நெகிழ வைத்திருக்கிறது.

தவிர, பூங்கோதை ஆலடி அருணாவின் ஆதரவாளர்கள் நம்மிடம், ‘‘சார், கட்சித் தலைமை நம்மை கைவிடாது என்று பொறுமையாக காத்துக்கொண்டிருக்கிறார் பூங்கோதை ஆலடி அருணா. ஆனால், எங்களால் அப்படி இருக்க முடியவில்லை. காரணம், இங்கு கோஷ்டி அரசியல் உச்சத்தில் இருக்கிறது.

பூங்கோதை ஆலடி அருணா அமைச்சராக இருந்தபோதும் சரி, எம்.எல்.ஏ.வாக இருந்தபோதும் சரி, கோஷ்டிப் பூசல் இந்தளவிற்கு இல்லை. இவரைத் தோற்கடித்தவர்கள் கூட இன்று வரை பதவியில்தான் இருக்கிறார்கள். தவிர, அ.தி.மு.க.வில் இருந்து வந்தவர்களுக்குக்கூட தலைமை பதவி கொடுத்திருக்கிறது. ஆனால், தி.மு.க.வே ‘என் சுவாசம்’ என இருக்கும் பூங்கோதைதைக்கு இன்னும் முக்கியத்துவம் கொடுக்காதது வருத்தம் அளிக்கிறது. ஒரு பெண்ணாக இருந்து அரசியல் களத்தில் தடைக்கற்களை தாண்டி மக்கள் சேவை செய்தவர் பூங்கோதை ஆலடி அருணா.

சமீபத்தில் கூட, கடந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த சுரேஷ் ராஜனுக்கு தி.மு.க. தலைமை பொறுப்பு வழங்கியிருக்கிறது. எனவே, வருகிற சட்டமன்றத் தேர்தலில் தென்மாவட்டங்களில் தி.மு.க. வெற்றிபெற பூங்கோதை போன்றவர்களுக்கு தி.மு.க. தலைமை முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதே எங்களது விருப்பம்’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal