தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 6 மாநிலங்களவை எம்.பி. பதவிகளில், திமுக சார்பில் ஒரு இடம் கமல்ஹாசனுக்கு வழங்கப்பட உள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது இதற்கான மறைமுக ஒப்பந்தம் போடப்பட்டது.
அதிமுக கூட்டணியில் பாமக இல்லாததால் மீண்டும் அன்புமணிக்கு எம்.பி. பதவி கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது. தமிழகம் சார்பில் மாநிலங்களவை எம்.பி.க்களாக உள்ள வைகோ, அன்புமணி, பி.வில்சன், எம்.சண்முகம், என்.சந்திரசேகரன், எம்.முகமது அப்துல்லா ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை 27-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், இந்த 6 மாநிலங்களவை பதவிகளுக்கான தேர்தலை, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதில், அன்புமணி மற்றும் என்.சந்திரசேகரன் ஆகியோர் கடந்த முறை அதிமுக சார்பில் தேர்வானவர்கள். மற்ற நால்வரும் திமுக சார்பில் தேர்வாகினர். ஒரு மாநிலங்களவை எம்.பி.க்கு 34 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆதரவு வேண்டும். அந்த அடிப்படையில், திமுகவுக்கு 4 மற்றும் அதிமுகவுக்கு 2 எம்.பி. பதவிகள் கிடைக்கும்.
இதில், திமுக சார்பில் தற்போது எம்.பி.யாக உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆகியோர் மீண்டும் தேர்வாக உள்ளனர். சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் முகமது அப்துல்லா தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், மற்றொரு எம்.பி.யாக, எம்.சண்முகத்துக்கு பதில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான நடிகர் கமல்ஹாசன் தேர்வு செய்யப்படுவார் என தெரிகிறது.
கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை தெற்கில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்த கமல், கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்தார். அவர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடாத நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தையின் போது, மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்குவது குறித்து உடன்பாடு செய்யப்பட்டது.
இதையடுத்து, திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்தார். மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியது. எனவே, ஏற்கெனவே செய்யப்பட்ட உடன்பாடு அடிப்படையில் திமுகவில் ஒரு எம்.பி. பதவி கமலுக்கு வழங்கப்படும் என திமுக வட்டாரங்களில் கூறப்படுகிறது.
அதிமுக சார்பில் 2 எம்.பி.க்களில் ஒருவர் அன்புமணி. தற்போது அதிமுகவுடன் கூட்டணியில் பாமக இல்லை. இதுதவிர பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையில் மோதல் நிலவி வருவதால், அன்புமணியின் எம்.பி. பதவிக்கான வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, இரண்டு இடங்களையும் அதிமுகவே நிரப்ப உள்ளது.
அந்த வகையில், அந்த பதவிகளை பிடிக்க போவது யார் என கட்சியினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தென் தமிழகத்தில் ஒருவருக்கும், வட தமிழகத்தில் ஒருவருக்கும் வாய்ப்பளிக்க பழனிசாமி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் ராஜ் சத்யன், நடிகை விந்தியா ஆகியோருக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கட்சியினர் மத்தியில் கூறப்படுகிறது.
அதேநேரத்தில், இப்போது பதவிக் காலம் நிறைவடையும் சந்திரசேகர் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், ஆதிதிராவிடர் ஒருவருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் வடமாவட்டத்தைச் சேர்ந்தஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவருக்கு கொடுக்கலாமா அல்லது பாஜகவுடன் கூட்டணி வைத்த நிலையில் முஸ்லிம்களுக்கு பிரதிநித்துவம் அளிக்கும் வகையில் முஸ்லிம் ஒருவருக்கு கொடுக்கலாமா என்பது குறித்து பழனிசாமி மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.