‘‘2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் தி.மு.க. ஆட்சியைப் பிடிக்கும்’’ என அடித்துக்கூறியிருக்கிறார் சீனியர் அமைச்சர் கே.என்.நேரு!

2026 சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளை ஆற்றி வருகின்றன. திமுகவில் மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் வேலைகள் சூடுபிடித்துள்ளன.

இந்நிலையில் புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சரும், திமுக முதன்மை செயலாளருமான கே.என்.நேரு, “திமுகவினர் உற்சாகமாக தற்போது முதலே தேர்தல் பணியாற்றி வருகிறார்கள். முதல்வர் கூறியது போல ஏழாவது முறையாக மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி தான் அமையும். தற்போது பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்டபோது அரசு சார்பாக விடுபட்டது எது எது செய்ய வேண்டும் என்று எங்களிடம் கூறியுள்ளனர்.

அனைத்தையும் குறிப்பு எடுத்து வைத்துள்ளேன். முதல்வரிடம் எடுத்துக் கூறி அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். அதிமுக எப்பொழுதும் திமுகவை குறை சொல்லிக்கொண்டு தான் இருப்பார்கள். அவர்கள் என்னதான் குறை கூறினாலும் அதனை தாண்டி கடந்த 10 தேர்தல்களிலும் திமுக தான் வென்றுள்ளது. அதேபோல் அடுத்து வரும் சட்டமன்றத்தேர்தலிலும் திமுக மாபெரும் வெற்றி பெறும்.

2026 சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சிக்கு வராது என்று எல்லாரும் சொல்கிறார்கள். ஆனால் பொதுமக்கள் முதல்வருக்கு தான் ஆதரவு தெரிவிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. எந்த காலத்திலும் இதுபோல் திமுக தோழர்கள் உற்சாகமாக இருந்து பார்த்ததில்லை. தற்போது அவர்கள் உற்சாகமாக இருந்து எங்களுக்கும் உற்சாகமூட்டி இருக்கின்றனர். டெல்டா மாவட்டத்தில் 41 தொகுதிகளுக்கான பொறுப்பை என்னிடம் கொடுத்துள்ளனர்.

அதில் இரண்டு, மூன்று தொகுதிகளை தவிர அனைத்து தொகுதிகளிலும் திமுகவிற்கு சாதகமாக தான் உள்ளது. அறந்தாங்கி தொகுதியில் இந்த முறை திமுக போட்டி போட வேண்டும் என்று அனைவரும் கூறியுள்ளனர். நான் முடிவெடுக்க முடியாது தலைவர் தான் முடிவு எடுக்க வேண்டும். இவர்களுடைய கோரிக்கையை முதல்வரிடம் எடுத்துக் கூறுவேன்” என்றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal