தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் ஆளும் கட்சிக்கு நெருக்கமானவர்கள் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபடுவதாக அமலாக்கத்துறை தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில்தான் கர்நாடக உள்துஐற அமைச்சர் பரமேஸ்வராவுக்கு தொடர்புடைய கல்வி நிறுவனங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அதில், உள்துறை அமைச்சராக பரமேஸ்வரா இருந்து வருகிறார்.

இந்த நிலையில், பரமேஸ்வராவுக்கு தொடர்புடைய கல்வி நிறுவனங்களில் அமலாக்கத்துறை திடீரென சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். துமகுருவில் உள்ள ஸ்ரீ சித்தார்த்தா மருத்துவக்கல்லூரி, ஸ்ரீ சித்தார்த்தா தொழில்நுட்ப கல்வி நிறுவனம் மற்றும் பெங்களூரு புறநகரில் உள்ள நெலமங்கலத்தில் உள்ள சித்தார்த்தா மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்திலும் இந்த ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ரெய்டுக்கான காரணங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

இது குறித்து முதல்வர் சித்தராமையா கூறுகையில், ‘ரெய்டு பற்றி எனக்கு ஏதும் தெரியவில்லை. அதைப் பற்றி அறிந்து விட்டு பதிலளிக்கிறேன்,’ என்றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal