திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

மதுபானங்கள் கொள்முதல் விவகாரம் தொடர்பாக 2 நாட்கள் நடந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களின் படி, டாஸ்மாக் துணை பொது மேலாளர் ஜோதி சங்கரிடம் நேற்று 5 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்துக்கு தனியார் மதுபான தொற்சாலைகளில் இருந்து மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது தொடர்பாக முறைகேடுகள் நடந்ததாக கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகம், குடோன்களில் சோதனை நடத்தியது. இந்த சோதனையின் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கை வாயிலான விளக்கம் அளித்திருந்தது.

அதன் தொடர்ச்சியாக கடந்த 16 மற்றும் 17ம் தேதிகளில் தமிழ்நாடு டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் வீடு, பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு, தனியார் மதுபான நிறுவனத்தன் பிஆர்ஓ மேகநாதன் வீடு, திருவல்லிக்கேணியில் தொழிலதிபர் தேவக்குமார் வீடு, தி.நகர் ஆற்காடு சாலையில் உள்ள கேசவன் வீடு, சாஸ்திரி நகரில் உள்ள மின்வாரிய ஒப்பந்ததாரர் ராஜேஷ்குமார் வீடு, சேத்துப்பட்டு ஜெகநாதபுரம் முதல் தெருவில் உள்ள பாபு வீடு, எம்.ஆர்.சி. நகரில் உள்ள தொழிலதிபர் ரித்தீஷ் வீடு உள்பட சென்னை முழுவதும் 12 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர்.இந்த சோதனையில் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள், போக்குவரத்து டெண்டர் தொடர்பான ஆவணங்களை பறிமுதல் செய்தனர். அதேநேரம் சோதனையின் இடையே டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகனை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று தனியாக விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.

அதனை தொடர்ந்து டாஸ்மாக் நிறுவனத்தின் துணை பொது மேலாளர் ஜோதி சங்கர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை கடந்த வெள்ளிக்கிழமை சம்மன் அனுப்பினர். அந்த சம்மனை தொடர்ந்து டாஸ்மாக் நிறுவனத்தின் துணை மேலாளர் ஜோதி சங்கர் நேற்று காலை 11 மணிக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை மண்டல அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அப்போது அவரிடம் விசாரணை அதிகாரிகள் 2 நாட்கள் நடந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களை வைத்து விசாரணை நடத்தினர். காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்த விசாரணையில் டாஸ்மாக் துணை பொது மேலாளர் ஜோதி சங்கர் அளிக்கம் பதிலை அமலாக்கத்துறை அதிகாரிகள் வாக்குமூலமாக பதிவு செய்தனர்.

அதேநேரம் இந்த வழக்கில் தொழிலதிபர் ரித்தீஷ் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் ஆகியோர் சோதனையின் போது வீட்டில் இல்லை. இதனால் இருவரும் வெளிநாடு சென்று இருக்கலாம் என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். எனவே இருவர் குறித்து விபரங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளுக்கு ஏதேனும் சென்றுள்ளார்களா என்று நேற்று விசாரணை நடத்தினர். அதேநேரம் இருவரையும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியுள்ளதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal