ரூ.200 கோடிக்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக, அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகிறது. அவரின் மகன்களான விஜயகுமார், சந்தோஷ்குமார் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது..
அதிமுக ஆட்சியில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்த நிலையில், அது தொடர்பான ரெயிடுகளை தொடர்ந்து நடத்தி வருகிறது.
அந்தவகையில், அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சரும் ஆரணி எம்எல்ஏவும் ஆன சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் தற்போது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இவருடைய மகன்கள் ஆன விஜயகுமார் மற்றும் சந்தோஷ்குமார் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.. ஏற்கனவே, சென்னையில் உள்ள டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் விசாகன் மற்றும் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் ஆகியோரது வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், அதிமுகவின் முக்கிய புள்ளியான ஆரணி சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் ரெய்டு நடப்பது மிகுந்த பரபரப்பை அரசியல் களத்தில் உண்டு பண்ணி வருகிறது.
ஆரணி தொகுதி எம்எல்ஏவான சேவூர் ராமச்சந்திரன், கடந்த அதிமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக செயல்பட்டவர் ஆவார். 200 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து சேர்த்ததாக கூறி இந்த ரெயிடு நடப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது சுமார் 20-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இந்த சோதனையை கடந்த 2 மணி நேரத்துக்கும் மேலாக செய்து கொண்டிருக்கிறார்கள்.