ஒரு பக்கமும் ‘டாஸ்மாக்’ மூலமாகவும், மறுபக்கம் திரைத்துறையின் வாயிலாகவும் அமலாக்கத்துறை முதல்வரின் குடும்பத்தை நெருங்கி வருவதுதான் திமுகவில் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது.

ஒரே நேரத்தில், 500 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்து, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், அதர்வா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படங்களை தயாரிப்பவரும், முதல்வர் ஸ்டாலினின் நெருங்கிய உறவினருமான ஆகாஷ் என்பவர் வீட்டில், சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் பாஸ்கரன். இவரது மகன் ஆகாஷ். இவர், ‘டான் பிக்சர்ஸ்’ என்ற நிறுவனம் வாயிலாக, சினிமா படங்களை தயாரித்து வருகிறார். ஒரே நேரத்தில், 500 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்து, தனுஷ் நடிப்பில், இட்லி கடை சிவகார்த்திகேயன் நடிப்பில், பராசக்தி அதர்வா நடிப்பில், இதயம் முரளி மற்றும் சிம்பு நடிக்கும் ஒரு படத்தையும் தயாரித்து வருகிறார்.குறுகிய காலத்தில், தமிழ் சினிமாவில் கோலோச்சி வரும் ஆகாஷின் அபார வளர்ச்சி, தமிழ் திரையுலக வட்டாரத்தையே பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.

மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து; அவரது மகள் தேன்மொழியை, கடலூரைச் சேர்ந்த தொழில் அதிபரும், ‘கவின்கேர்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான சி.கே.ரங்கநாதன் திருமணம் செய்துள்ளார். இவர்களின் இரண்டாவது மகள் தாரணி. அவரது கணவர் தான் இந்த ஆகாஷ்.

முதல்வர் ஸ்டாலினின் நெருங்கிய உறவினரான ஆகாஷ், தாரணி ஆகியோர், சென்னை தேனாம்பேட்டையில், கே.பி.என்.தாசன் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஆகாஷ் ஈடுபட்டு வருவதாக, அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.

அதன் அடிப்படையில், ஆகாஷ் வீட்டில் நேற்று காலை 6:00 மணியில் இருந்து சோதனை நடத்தினர்; முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றி உள்ளனர். ஆகாஷின் கார் ஓட்டுநரிடமும் விசாரணை நடக்கிறது. இந்த விவகாரம்தான் திரையுலகிலும், அரசியல் களத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal