உச்ச நீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கண்ணாவின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று புதிய தலைமை நீதிபதியாக பி ஆர் கவாய் பதவியேற்றுக்கொண்டார். இவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பி ஆர் கவாய் பதவியேற்றிருந்த நிலையில் அடுத்த 6 ஆண்டுகளில் தலைமை நீதிபதியாக பதவி ஏற்றுள்ளார். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நீதிபதி கவாய் அடுத்த ஆறு மாதங்கள் மட்டுமே உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருப்பார். வரும் நவம்பரில் கவாய் ஓய்வு பெறும் நிலையில், சுமார் ஆறு மாதங்களுக்கு அவர் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருப்பார். 2007ஆம் ஆண்டு நாட்டின் தலைமை நீதிபதியான கே.ஜி. பாலகிருஷ்ணனுக்குப் பிறகு தலைமை நீதிபதி பதவியை வகிக்கும் இரண்டாவது தலித் இவர் ஆவார்.
கடந்த 1985 ஆம் ஆண்டு வழக்கறிஞராக பதவியேற்றுக்கொண்ட பிஆர் கவாய், மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். பிஆர் கவாய் பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்பளித்த நீதிபதிகளின் அமர்வில் அங்கம் வகித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழக்கு, தேர்தல் பிரமாணப்பத்திரம் செல்லாது என்ற உத்தரவிட்ட வழக்கு, பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்ட வழக்கு ஆகிய வழக்குகளில் தீர்ப்பளித்த அமர்வில் இவரும் இடம் பெற்று இருந்தார்.