இலங்கை தமிழர்களின் இறப்புக்கு பழி தீர்க்கும் விதமாக, முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி நினைவிடத்தில், மண்ணெண்ணெய் குண்டு வீச முயன்றதாக, போலீசாரிடம் சிக்கிய வாலிபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் முத்துச்செல்வன், 26. இவர் நேற்று முன்தினம், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள, முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி நினைவிடத்தில், மண்ணெண்ணெய் குண்டு வீச முயன்றார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பிடித்து, அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

முத்துச்செல்வன் அளித்த வாக்குமூலத்தில், ‘‘தூத்துக்குடியில் இருந்து பஸ்சில் சென்னைக்கு வந்தேன். நான் புத்தகங்கள் வாயிலாக, இலங்கை தமிழர்களுக்கு நடந்த கொடூரங்கள் குறித்து தெரிந்து கொண்டேன். இலங்கை தமிழர்களின் இறப்புக்கு பழிவாங்கும் விதமாக, கருணாநிதி நினைவிடத்தில் மண்ணெண்ணெய் குண்டு வீச முயன்றேன்’’ என, கூறியுள்ளார்.

போலீசார் கூறுகையில், ‘முத்துசெல்வன் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கிறார். மன நலமும் பாதிக்கப்பட்டு உள்ளார். அதனால், கீழ்ப்பாக்கத்தில் உள்ள, அரசு மன நல மருத்துவனையில் சேர்க்க உள்ளோம்’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal