தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இரண்டு கட்சிகளிலும் இருக்கும் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதை உணர்ந்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆதரவுக் கரம் நீட்ட ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதனால் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் த.வெ.க.வில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
தமிழக அரசியல் வரலாற்றில் எத்தனையோ பேர் புதியக் கட்சியை ஆரம்பித்திருக்கலாம். ஆனால், நடிகர் விஜய் மட்டும்தான் தனது முதல்வர் அரசியல் மாநாட்டில் வரலாற்றுத் தலைவர்களின் புகைப்படங்களை வைத்திருந்தார். அந்த வகையில் முத்தரையர் சமுதாயத்தை வெறும் ஊறுகாயாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் தி.மு.க., அ.தி.மு.க.விற்கு மத்தியில் வீர முத்தரையரின் கட் அவுட்டை விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டில் வைத்திருந்தார். இது முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்களை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
சரி விஷயத்திற்கு வருவோம்… தி.மு.க., அ.தி.மு.க.வில் அப்படி என்ன முத்தரையர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று மலைக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சீனியர் ஒருவரிடம் பேசினோம்.
‘‘தம்பி…. திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, பெரம்பலூர், அரியலூர், கரூர், சிவகங்கை, திண்டுக்கல் என தமிழகத்தில் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதில் முத்தரையர்கள்தான் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். இது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் தெரியும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் தெரியும்.
ஆனால், உதாரணமாக ஒன்றைச் சொல்கிறேன். இன்றைக்கு திருச்சியில் அதிகமாக வசிப்பவர்கள் முத்தரையர்கள்தான். ஆனால், அம்மாவட்டத்தில் கோலோச்சி நிற்பவர் அமைச்சர் கே.என்.நேரு. இன்றைக்கு அமலாக்கத்துறையில் பிடியில் சிக்கி தவித்து வருகிறார். அந்தளவிற்கு கடந்த நான்கு வருடங்களில் வாரிக்குவித்ததாக கூறுகிறார்கள்.
சரி, அதே போல் திமுவில் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரும் இருக்கிறார். ஆனால், அவர் இருக்கும் இடமே தெரியாமல் இருக்கிறார். இதுதான் இன்றைக்கு தி-.மு.க.வின் நிலை!
அ.தி.மு.க. சற்றுப் பார்த்தால் இன்னும் கொடுமையாக இருக்கும். மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா முத்தரையர் சமுதாய மக்கள் மீது அதிக பாசத்தை வைத்திருந்தார்கள். முத்தரையர்களும் அ.தி.மு.க.விற்குத்தான் தொடர்ச்சியாக வாக்களித்து வந்தார்கள். ஆனால், இருவர் மறைவிற்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த யாருக்கும் முக்கியப் பதவியை கொடுக்க மறுத்து வருகிறார்.
இது பற்றி எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டால், ‘முத்தரையர் சமுதாயத்தில் நீங்கள் ஒற்றுமையாக இருக்கிறீர்களா?’ என எதிர்கேள்வி கேட்டு ஏளனமாக பார்க்கிறார். சம்பிரதாயத்திற்காக முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மா.செ. பதவி கொடுத்திருக்கிறார் எடப்பாடி! எனவே, இனியும் நாங்கள் திராவிட இயக்கங்களை நம்பி எங்களுடைய எதிர்காலத்தை இழக்க விரும்பவில்லை.
எனவேதான், தமிழக அரசியல் களத்தில் முதல் அரசியல் மாநாட்டில் முத்தரையர் சமுதாயத்தையும் மதித்த தம்பி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் எங்களுடைய அரசியல் அர்ப்பணிப்பை கொடுக்க இருக்கிறோம். இனியும் தி.மு.க., அ.தி.மு.க.வை நம்பி பிரயோஜனம் இல்லை. இனி வருங்காலங்களில் இரண்டு கட்சிகளுக்கும் தமிழகத்தில் இடம் இல்லை என்பதை தமிழக வெற்றிக் கழகம் வரும் 2026ல் உணர்த்தும்’’ என ஆவேசமாக முடித்தார்.
த.வெ.க. தலைவர் விஜய்யும் முத்தரையர் சமுதயாத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளிடம் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தற்போது ‘ஜனநாயகன்’ இறுதிகட்ட படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் விஜய். ஜூன், ஜூலை மாதங்களில் தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு தரப்பிலும் இருந்து முக்கியமான முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் த.வெ.க.வில் இணையலாம் என தகவல்கள் வெளியாகியிருக்கிறது.