அமித்ஷா தமிழகம் வரும் நிலையில், அ.தி.மு.க.வின் சீனியர்களுக்கு எடப்பாடி பழனிசாமி முக்கிய உத்தரவைப் பிறப்பித்திருக்கிறாராம்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று இரவு தமிழ்நாடு வருகிறார். நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பல்வேறு தரப்பினரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பெரும் அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு இடையே பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று டெல்லி பயணம் மேற்கொண்டார். நேற்று காலை மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து ஆலோசனை செய்து உள்ளார்.

இதனால் நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக தலைவராகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஜக மாநிலத் தலைவர் போட்டியில் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகும் நிலையில் இவரின் டெல்லி பயணம் கவனம் பெற்றுள்ளது.

தமிழக பாஜக தலைவருக்கான புதிய ரேஸில் மொத்தமாக 6 பேர் உள்ளார்களாம். இதில் முக்கியமான சர்ப்ரைஸ் முகம் ஒன்றும் இருப்பதாக பாஜக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக பாஜகவில் மாவட்ட தலைவர்கள், மண்டலத் தலைவர்கள் நியமனம் முடிந்த நிலையில், மாநில தலைவர் மற்றும் மாநில நிர்வாகிகளை நியமிப்பது மட்டுமே பாக்கி இருக்கிறது. மாநில நிர்வாகிகள் குறித்த பட்டியல் கட்சியின் தேசிய தலைமைக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால் அண்ணாமலை மாற்றப்படுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2023ல் அதிமுக பாஜக கூட்டணி உடைவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக கருதப்படும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை..பாஜக தமிழக தலைவர் பதவியில் இருந்து விலகலாம் என கட்சிக்கு நெருக்கமான வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்ணாமலை இருந்தால் கூட்டணி அமைவது கஷ்டம் என்று டெல்லி இந்த முடிவை எடுக்கலாம் என்று கூறப்படுகிறது. அண்ணாமலையின் சமீபத்திய பேட்டிகளும் கூட இதை உணர்த்துவதாகவே இருக்கின்றன.

இந்த நிலையில்தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று இரவு தமிழ்நாடு வருகிறார். நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பல்வேறு தரப்பினரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை வரும் அமித் ஷா பல அரசியல் சந்திப்புகளை நடத்துகிறார். முக்கியமாக அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்ய உள்ளார். சமீபத்தில் டெல்லியில் எடப்பாடி பழனிச்சாமி – அமித் ஷா இடையே சீட் ஷேரிங் பற்றி விவாதிக்கப்பட்ட போது, பாஜகவுக்கு என தனியாக அமித் ஷா பேசவில்லை. மாறாக, ‘தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ‘ என்று தான் பேசியுள்ளார். அதாவது, அதிமுகவுக்கும் என்.டி.ஏ.வுக்கு 234 தொகுதிகளை சரிபாதியாக பிரித்துக் கொள்ளலாம் என்று அமித் ஷா சொல்ல, எடப்பாடி உள்ளிட்ட அதிமுகவினர் அனைவரும் ஏற்க மறுத்தனர்.

பல்வேறு சதவீத கணக்குகள் சொல்லப்பட்டு, அதிமுகவுக்கு 70 சதவீதம், என்.டி.ஏ.வுக்கு 30 சதவீதம் என்று அதிமுக தரப்பில் முன் வைக்கப்பட்டன. 30 சதவீத இடங்களில் ஓபிஎஸ், தினகரன் உள்பட யாரையெல்லாம் கூட்டணியில் சேர்த்துக் கொள்ள பாஜக விருப்பப்படுகிறதோ அந்த கட்சிகளுக்கு பாஜக தான் சீட் ஒதுக்கித் தந்து கொள்ள வேண்டும். அதிமுகவுக்கான 70 சதவீத இடங்களில் ஒரு சீட் கூட கேட்டு நெருக்கடித்தரக்கூடாது என்று அதிமுக தலைவர்கள் வலியுறுத்தினர். அதேசமயம், அமித் ஷாவோ, 60 : 40 என பகிர்ந்து கொள்ளலாம். 40 சதவீத இடங்களை என்.டி.ஏ. வுக்கு ஒதுக்குங்கள். கூட்டணி கட்சிகளுக்கு நாங்கள் சீட் தந்து கொள்கிறோம் என்பதை சொல்லியிருக்கிறார். இரு தரப்பும் முன் வைக்கும் சதவீத கணக்கினால் சீட் ஷேரிங் மட்டும் முடிவாகாமல் இருக்கிறது. மற்றபடி கூட்டணி உறுதியாகி உள்ளது என்கின்றனர் அதிமுகவின் இரண்டாம் நிலை தலைவர்கள்.

அதிமுகவின் முக்கியமான டாப் எம்எல்ஏக்கள் சிலருக்கு. கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முக்கியமான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தமிழ்நாடு வருகையை முன்னிட்டு முக்கியமான உத்தரவு ஒன்றை நிர்வாகிகளுக்கு அவர் பிறப்பித்து உள்ளார். அதன்படி 5 நாட்கள் சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டுள்ள போதும்.. அதனால் யாரும் வீட்டிற்கு போக வேண்டாம்.. சொந்த ஊருக்கு செல்ல வேண்டாம்.. எல்லோரும் சென்னையிலேயே இருக்குமாறு முக்கிய நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.

முக்கியமாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் சென்னையிலேயே இருக்க வேண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாம். ஆனால் செங்கோட்டையனுக்கு இந்த அறிவிப்பு செல்லவில்லை. அவர் சென்னையில்தான் இருக்கிறார். ஆனாலும் அவருக்கு அறிவிப்பு செல்லவில்லை. அதேபோல் தங்கமணி சென்னையில் இல்லை என்றும் கூறப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal