‘டாஸ்மாக் வழக்கு விவகாரத்தில் அதிகாரிகளை தமிழக அரசு காப்பாற்றத் துடிக்கிறதா?’ என சரமாரியாக பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது நீதிமன்றம்.
தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் கீழ் இயங்கும் டாஸ்மாக் தமிழகத்தில் தற்போது சில்லறை மதுபான விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இங்கு பல்வேறு தனியார் மது உற்பத்தி நிறுவனங்களின் மது வகைகள் விற்கப்படுகிறது.
இந்த நிலையில், நிர்ணயத்தை விலையை விட கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், மேலும் கணக்கில் காட்டாமல் தனியார் மது உற்பத்தி நிறுவன உரிமையாளருடன் சேர்ந்து முறைகேடு நடப்பதாக புகார் கூறப்பட்டது.
இதனையடுத்து அந்த தகவலின் அடிப்படையில் சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 6ஆம் தேதி முதல் சோதனை நடத்தினர். ஒரு சில இடங்களில் சோதனை முடிவடைந்த நிலையில், சென்னை, புதுக்கோட்டை, கோவை ஆகிய பகுதிகளில் சோதனை 8ஆம் தேதி வரை நீடித்தது. சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம், அம்பத்தூர் டாஸ்மாக், திமுக எம்பி ஜெகத்ரட்சகன் சொந்தமான அக்காடு டிஸ்டிலர்ஸ் மதுபான நிறுவனம் அக்கார்டு ஹோட்டல், ஆயிரம் விளக்கு உள்ள எஸ்என்ஜெ டிஸ்டிலரீஸ், டி நகரில் உள்ள கால்ஸ் மதுபானம், சிவா டிஸ்டிலரீஸ், மயிலாப்பூர் ஆர் கே சாலையில் உள்ள எம்ஜிஎம் மதுபானம் நிறுவனம் ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை வரை சோதனை நடைபெற்ற நிலையில், சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை மதுபான கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்கு டெண்டர் வழங்கியது உள்ளிட்டவற்றில் 1000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், அமலாக்கத் துறையின் இந்த சோதனையை அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி கட்டமைப்புக்கு விரோதமானது என அறிவிக்கக் கோரியும், அரசு அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்க கோரியும், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளை துன்புறுத்த கூடாது என அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரி தமிழக உள்துறை செயலாளரும், டாஸ்மாக் நிர்வாக இயக்குனரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில், டாஸ்மாக் வழக்கை நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அமர்வு விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில், இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதால், வழக்கை தள்ளிவைக்க வேணடும் என கோரிக்கை வைக்கபட்டது. அப்போது நீதிபதிகள் வழக்கு விசாரணைக்கு வந்த போதே உச்ச நீதிமன்றம் செல்வதாக கூறியிருந்தால் வழக்கை நாங்கள் பட்டியிலிட்டிருக்க மாட்டோம் என்றும், இதன் மூலம் நீங்கள் நீதிமன்றத்தை இழிவுபடுத்தியுள்ளதாகவும், குறைந்தபட்சம் நீதிமன்றத்திற்காவது நேர்மையாக இருக்க வேண்டும் என அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், இந்த மனு பொது நலத்துக்காக தாக்கல் செய்யப்பட்டதா? அல்லது சில டாஸ்மாக் அதிகாரிகளை காப்பாற்றுவருவதற்கு செய்யபட்டதா என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர். மாநில அரசின் உரிமைக்காகவே மனுத்தாக்கல் செய்யப்பட்டதாகவும், மனு தாக்கல் செய்ய எங்களுக்கு உரிமை உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கபட்டது. இதையடுத்து நீதிபதிகள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படவில்லை என்றால் பிற்பகல் 2.15 மணிக்கு வாதங்களை முன்வைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.