அமைச்சர் பொன்முடியின் சொத்துக்குவிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்த நிலையில், ஐகோர்ட் நீதிபதி எழுப்பிய முக்கியக் கேள்வி பொன்முடி தரப்பிற்கு சாதகமாக அமையுமா? அல்லது பாதகமாக அமையுமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் கருணாநிதி தலைமையில் 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை நடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். அந்த காலக்கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1 கோடியே 36 லட்சம் அளவுக்கு சொத்துகளை சேர்த்ததாக குற்றம் சாட்டினார். அவர் மீது 2001-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் உத்தரவின்படி, வேலூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம், பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி உள்ளிட்டோரை வழக்கில் இருந்து விடுதலை செய்தது.

வேலூர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார். இந்த வழக்கு நீண்ட நாட்களுக்கு பின்னர், நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ, ‘‘வழக்கை வேலூர் கோர்ட்டுக்கு மாற்றவேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் யாரும் கேட்கவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களின் விளக்கத்தை கேட்காமல் வேலூர் கோர்ட்டுக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது. அதற்கு குற்றம் சாட்டப்பட்டவர் பொறுப்பாக மாட்டார்’’ என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி, ‘‘ஒரு குற்ற வழக்கை ஒரு மாவட்டத்தில் இருந்து வேறு ஒரு மாவட்டத்துக்கு, அதாவது அந்த மாவட்டத்துக்கு நிர்வாக நீதிபதியாக இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி மாற்ற முடியுமா? இதற்காக உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் அடங்கிய குழு முன் ஆய்வுக்காக வைக்காமல், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, தன்னிச்சையாக வழக்கை வேறு மாவட்டத்திற்கு மாற்ற ஒப்புதல் வழங்க முடியுமா?

இந்த கேள்விகளுக்கு அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், மனுதாரர் தரப்பு மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ விளக்கம் அளிக்க வேண்டும். ஒருவேளை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அந்த அதிகாரம் உள்ளது என்றால், தாமாக முன்வந்து எடுத்த இந்த வழக்கை மேற்கொண்டு விசாரணை நடத்த முடியாது. எனவே, இந்த வழக்கை வருகிற 17-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன்’’ என்று நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal