பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பூட்டான் உள்ளிட்ட 41 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கு பயணம் செய்வதற்குத் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, சட்டவிரோத குடியேற்றம், வரி விதிப்புகள், விசா கெடுபிடிகள் எனப் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்து நிறைவேற்றி வருகிறார். இதில் தற்போது சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுப்பதில் கடுமையாக விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றனர். மேலும் சட்டவிரோதமாகக் குடியேறியர்கள் கை விலங்கிடப்பட்டு நாடு கடத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், துர்க்மெனிஸ்தான், பெலாரஸ், பூட்டான் மற்றும் வனுவாட்டு உள்ளிட்ட 41 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கு பயணம் செய்வதற்குத் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பல்வேறு குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி இந்த தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க அரசு நிர்வாக மட்டத்தில் இருந்து கிடைத்த வரைவு அறிக்கை தகவலின்படி ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நாடுகள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதன் முதல் குழுவில் உள்ள நாட்டினரின் விசாவை முழுமையாக ரத்து செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டாவது குழு, பகுதி கட்டுப்பாடுகள் மற்றும் தடையை எதிர்கொள்கிறது. மூன்றாவது குழுவில் உள்ள நாடுகளுக்கு சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகளைச் சரிசெய்ய 60 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என்று தெரிகிறது.
ராய்ட்டர்ஸ்க்கு கிடைத்த வரைவின்படி..
முதல் குழுவில், ஆப்கானிஸ்தான், கியூபா, ஈரான், லிபியா, வட கொரியா, சோமாலியா, சூடான், சிரியா, வெனிசுலா மற்றும் ஏமன் ஆகிய 10 நாடுகளின் குடிமக்கள் முழு விசா தடையை எதிர்கொள்ள நேரிடும்.
இரண்டாவது குழுவில் இடம்பெற்ற எரித்திரியா, ஹைட்டி, லாவோஸ், மியான்மர் மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளின் மீது சுற்றுலா, மாணவர் விசாக்கள் புலபெயர்வு விசா வழங்கல்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
மூன்றாவது குழுவில் இடம்பெற்ற பாகிஸ்தான் உள்ளிட்டவை தங்கள் குறைபாடுகளை சரி செய்ய 60 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என்று தெரிகிறது.
ட்ரம்ப் முதல் பதவிக்காலத்தில், ஏழு பெரும்பான்மை முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு பயண தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது விதிக்கப்பட உள்ள கட்டுப்பாடுகள் பெரிய அளவிலிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.