இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு திடீரென இதயவலி ஏற்பட்டதன் காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
தமிழ் சினிமாவின் ஜாம்பவான் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக 2 ஆஸ்கர் விருதுகளை வென்ற பின், சர்வதேச அளவில் ஏ.ஆர்.ரஹ்மான் பிரபலமடைந்தார். அதன்பின் இந்திய திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சர்வதேச திரைப்படங்களுக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இருப்பினும் தமிழ் மொழியில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
1992ல் தொடங்கிய பயணம் இதுவரை எந்தவித இடர்பாடுகளும் இல்லாமல் உச்சத்திலேயே இருக்கிறது. அண்மையில் கூட மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கான பின்னணி இசைக்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. அதன்பின் மாமன்னன் திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்த பாடல்கள் ரசிகர்களால் இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவரது மனைவி சய்ரா பானு இருவரும் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. ஏனென்றால் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவரது மனைவி இடையிலான காதல் தருணங்கள் வெளிப்பட்டுள்ளது. ஜாலியான தம்பதிகளாக பார்க்கப்பட்ட இருவரும், திடீரென பிரிவதாக கூறினர். இருந்தாலும் அவர்களின் முடிவை ரசிகர்கள் ஏற்று, ஏ.ஆர்.ரஹ்மான் இசைப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறி வந்தனர். தற்போது தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளின் படங்களுக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் இன்று திடீரென சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ஏ.ஆர்.ரஹ்மான் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இதுவரை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை. இன்று மாலை அல்லது நாளை ஏ.ஆர்.ரஹ்மான் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் உரிய விளக்கம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.