கர்நாடகாவில் தங்கம் கடத்திய வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவ், நீதிபதி முன் கதறி அழுததால் பரபரப்பு ஏற்பட்டது. ரன்யா ராவிடம் தங்கம் வாங்கிய நட்சத்திர ஹோட்டல் உரிமையாளர் தருண் ராஜ் என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இருந்து, கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு விமானத்தில், 12 கோடி ரூபாய் மதிப்பிலான 15 கிலோ தங்கக் கட்டிகள் கடத்தி வந்த கன்னட நடிகை ரன்யா ராவை, கடந்த 3ம் தேதி வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

சிறையில் அடைக்கப்பட்ட அவரை, மூன்று நாட்கள் காவலில் எடுத்து, வருவாய் புலனாய்வு பிரிவினர் விசாரித்தனர். நேற்றுடன் காவல் நிறைவு அடைந்தது. இதையடுத்து, பெங்களூரில் உள்ள பொருளாதார குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி விஸ்வநாத் கவுடர் முன் ரன்யா ராவை ஆஜர்படுத்தினர்.

அப்போது, ‘‘விசாரணையின் போது உங்களுக்கு தொல்லை கொடுத்தனரா?’’ என்று நீதிபதி கேட்டார். அதற்கு ரன்யா ராவ், ‘‘எனக்கு தொல்லை கொடுக்கவில்லை: என்னை மிரட்டும் தொனியில் பேசினர். நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்காவிட்டால், என்ன ஆகும் தெரியுமா என்று மிரட்டினர். சிலரின் அழுத்தத்தால் தங்கக் கட்டிகளை கடத்தி வந்தேன்’’ எனக் கூறி, கதறி அழுதார்.

வருவாய் புலனாய்வு பிரிவு சார்பில் ஆஜரான வக்கீல்கள், ‘‘விசாரணையின் போது நாங்கள் ரன்யா ராவை மிரட்டவில்லை. கண்காணிப்பு கேமரா முன் வைத்து தான் அவரிடம் விசாரித்து உள்ளோம்; தேவைப்பட்டால், அந்த காட்சிகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறோம்’’ என்றனர்.

இதையடுத்து, ரன்யா ராவை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதற்கிடையே, ரன்யா ராவ் தங்கம் கடத்திய விவகாரத்தில், கர்நாடகாவின் இரண்டு அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாக, பா.ஜ.க, மாநில தலைவர் விஜயேந்திரா நேற்று சட்டசபையில் குற்றம் சாட்டினார்.

பதிலுக்கு, ரன்யா ராவ் இயக்குநராக உள்ள நிறுவனத்திற்கு, பா.ஜ., ஆட்சியில் தான் 12 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது என்று, காங்கிரஸ் தலைவர்கள் காட்டமாக பதிலடி கொடுத்தனர். இதனால், ரன்யா ராவ் விவகாரத்தில் அரசியல் புள்ளிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.

ரன்யா ராவ் பயன்படுத்திய மொபைல் போனை, வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்த போது, ஏராளமான அரசியல்வாதிகள், போலீஸ் அதிகாரிகள் பெயரை பதிவு செய்து வைத்திருந்தது தெரிந்தது.

சில அரசியல்வாதிகள், போலீஸ் அதிகாரிகளுடன் அடிக்கடி அவர் பேசியதும் தெரிந்தது. குறிப்பாக தொழில் அதிபரும், நட்சத்திர ஹோட்டல் உரிமையாளருமான தருண் ராஜ் என்பவரிடம் அடிக்கடி பேசியதும், அவருக்கு தங்கம் கொடுத்ததும் தெரிய வந்தது.

தருண் ராஜை நேற்று தங்கள் அலுவலகத்திற்கு வரவழைத்து, வருவாய் புலனாய்வு அதிகாரிகள் விசாரித்தனர். அவர்கள் கேட்ட கேள்விக்கு சரியாக பதில் அளிக்காததால், தருண் ராஜ் கைது செய்யப்பட்டார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal