பாலியல் புகாரில் ஆசிரியர்கள் சிக்கினால், அவர்களது சான்றிதழ்கள் ரத்து செய்யப்படுவதோடு ‘டிஸ்மிஸ்’ செய்யப்பாடுவார்கள் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரித்திருந்தார். இந்த நிலையில், தமிழகம் முழுதும் பாலியல் புகாரில் சிக்கிய 25 ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் தினசரி பாலியல் வழக்குகள் பதிவான வண்ணம் உள்ளன. அதில், பள்ளிகளில் படிக்கும் மாணவிகளை தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய நிகழ்வும் அடக்கம். இப்புகார்களில் பல ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இதனையடுத்து, பாலியல் புகார்களில் சிக்கும் ஆசிரியர்கள் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறியதுடன், பணி நீக்கம் செய்யப்படுவர். சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
இந்நிலையில், பாலியல் புகார்களில் சிக்கிய 25 ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, புதுக்கோட்டை, விழுப்புரம், தர்மபுரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என 7 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டு உள்ளனர்.
3 ஆண்டுகளில் 238 ஆசிரியர்கள் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி உள்ளனர். 46 புகார்கள் வந்த நிலையில் குற்றவாளிகள் என நிருபிக்கப்பட்ட 25 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டு உள்ளனர். பணி நீக்கம் செய்யப்பட்டவர்களின் சான்றிதழ்களை ரத்து செய்யும் பணியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஈடுபட்டு உள்ளனர்.