கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணைக்கு பழனிசாமி முன்னாள் பாதுகாப்பு அதிகாரி வீரபெருமாள் கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார்.
கடந்த 2017-ல் நடந்த கோடநாடு கொலை, கொள்ளை வழக்குத் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. குறிப்பாக 2022-ல் இருந்து இந்த வழக்கை சிபிசிஐடி போலீசின் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்து வருகின்றனர். டிஎஸ்பி வேல்முருகன் தலைமையிலான குழுவினர் தொடர்ந்து இதுவரை 250-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே போல இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேரிடமும் மீண்டும் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலமாக பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சுமார் 7 மணி நேரம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. குறிப்பாக கடந்தமுறை சசிகலா கோடநாடு எஸ்டேட்டுக்கு வந்தபோது கொலை, கொள்ளை தொடர்பாக விசாரித்தாரா என்பது தொடர்பாக பல்வேறு கேள்விகள் நடராஜனிடம் கேட்கப்பட்டது.
அதனை தொடர்ந்து அன்றைய தினம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாள் விசாரணைக்கு ஆஜராக சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். அந்த சம்மனை தொடர்ந்து முன்னாள் பாதுகாப்பு அதிகாரி வீரபெருமாள் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார்.