தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இருபெரும் திராவிட இயக்கங்களில் யாருக்கு ராஜ்யசபா சீட்? என்ற விவாதமும், யாருக்கு கொடுக்கலாம் என எடப்பாடி பழனிசாமியும், ஸ்டாலினும் தீவிர யோசனையில் இருக்கிறார்களாம். அந்த வகையில் முக்குலத்தோர் சமுதாயத்தில் அகமுடையார் வாக்குகளை குறி வைத்து எடப்பாடி பழனிசாமி சில காய்களை நகர்த்துகிறாராம்.

இது பற்றி எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான வட்டாரத்தில் பேசினோம். ‘‘சார், ராஜ்யசபா சீட்டுக்கு சிலர் பல்வேறு சோர்சுகளை பயன்படுத்தி எப்படியாவது சீட் பெற்றுவிட வேண்டும் என காய்நகர்த்தினாலும், வரும் சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்துதான் எடப்பாடி பழனிசாமி ஒரு முடிவை எடுத்திருக்கிறார்.

அந்த வகையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருக்கும் போது முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த வாக்குகள் அப்படியே அ.தி.மு.க.விற்கு விழுந்தது. அவர் மறைவிற்குப் பிறகு நிலைமை மாறியது. இந்த நிலையில்தான் முக்குலத்தோர் சமுதாயத்தின் ஒரு பிரிவான அகமுடையார் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ராஜ்யசபா சீட் கொடுக்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்திருக்கிறார்.

தென் மாவட்டங்களைப் பொறுத்தளவில் 50 லட்சத்துக்கு மேல் அகமுடையார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் வாக்குகள் இருக்கிறது. இந்த வாக்குகளை சிந்தாமல், சிதறாமல் அ.தி.மு.க. பெற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்தி வருகிறார். அந்த வகையில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை தொகுதியில் யாரும் போட்டியிட விரும்பாத நிலையில், ‘நான் போட்டியிடுகிறேன்’ என எடப்பாடி பழனிசாமியின் தீவிர விசுவாசியான மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் முன்வந்தார். ஆனால், மதுரை அ.தி.மு.க.வில் நடந்த உள்குத்து அரசியலில் 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டார் டாக்டர் சரவணன். இது எடப்பாடி பழனிசாமிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

காரணம், அ.தி.மு.க.வில் பலனை அனுபவித்த பலர் செலவு செய்ய பயந்து, போட்டியிட மறுத்த நிலையில், டாக்டர் சரவணன் தாமாக முன்வந்து போட்டியிட்ட நிலையிலும், தி.மு.க.வுடனும், பா.ஜ.க.வுடனும் மறைமுகமாக கூட்டணி வைத்துக்கொண்ட ‘மாஜி’க்கள் சரவணனை மூன்றாம் இடத்திற்கு போக வைத்தனர். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளானார் டாக்டர் சரணவன். இந்த வேதனையின் போதுதான் இவரது தாயாரையும் பறிகொடுத்தார் டாக்டர் சரவணன். இதனால், அகமுடையார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அதிருப்தியடைந்தனர். டாக்டர் சரவணனும் அகமுடையார் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்தான் அகமுடையார் வாக்குகளை அப்படியே சிந்தாமல், சிதறாமல் பெறுவதற்கு டாக்டர் சரவணனுக்கு ராஜ்ய சபா சீட்டை கொடுத்துவிடலாம் என்ற யோசனையில் இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி. இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அதாவது, சட்டமன்றத் தேர்தலில் தொகுதி பொறுப்பாளராக இருக்கும் டாக்டர் சரவணனுக்கு இன்னும் இரண்டு தொகுதிகளை கொடுத்து உறுதியாக வெற்றி பெறச் செய்தாக வேண்டும் என எடப்பாடி பழனிசாமி உத்தரவிட இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. காரணம், காசு, பணத்தை கணக்குப் பார்க்காமல் வெற்றியை மட்டுமே குறியாகப் பார்ப்பவர் டாக்டர் சரவணன்.

தவிர, ஜெயலலிதா பிறந்த நாளன்றுகூட சேலத்திற்கு சென்று மருத்துவ உதவிகளை வழங்கினார். மதுரையிலும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிலையில்தான், முக்குலத்தோர் சமுதாயத்தின் உட்பிரிவான அகமுடையார் வாக்குகளை அள்ளுவதற்கு எடப்பாடி பழனிசாமி கணக்குப் போட்டிருக்கிறார்’’என்றனர்.

வருகிற சட்டமன்றத் தேர்தலில் வாக்குகளை சிந்தாமல், சிதறாமல் பெறவேண்டும் என எடப்பாடி பழனிசாமி அடிக்கடி கூறிவந்ததும் குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal