பா.ஜ.க, நடத்தி வரும் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவான இயக்கத்தில் கையெழுத்திட்ட அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., விஜயகுமாரை கட்சியில் இருந்து நீக்கி அக்கட்சி பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., விஜயகுமார். இவர் பா.ஜ.க, நடத்தி வரும் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவான இயக்கத்தில் கையெழுத்திட்டார். இது குறித்து தகவல் அ.தி.மு.க., கட்சி தலைமை வரை சென்றது. முன்னாள் எம்.எல்.ஏ., விஜயகுமாரை கட்சியில் இருந்து நீக்கி அக்கட்சி பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘‘கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்,
கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கட்சியினர் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது’’ இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.
கட்சியில் இருந்து நீக்கம் குறித்து, முன்னாள் எம்.எல்.ஏ., விஜயகுமார் கூறியதாவது: ‘‘பா.ஜ.க,வினர் வற்புறுத்திய காரணத்தினால் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட்டேன். இது குறித்து எனது தரப்பு கருத்தை பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., யிடம் தெரிவிப்பேன்’’ என்றார்.