சேலம், ஆத்தூரில் நடந்த கட்சிக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘‘அ.தி.மு.க.,வில் மட்டும் தான் சாதாரண தொண்டன் உச்சபட்ச அதிகாரத்திற்கு வர முடியும். அ.தி.மு.க., வில் இருக்கும் அனைவருமே தலைவர்கள் தான்; அ.தி.மு.க., உங்கள் சொத்து.

அனைத்து மக்களுக்கும் சொந்தமான கட்சி அ.தி.மு.க., அ.தி.மு.க.,வை முடிக்கப் பார்த்தார்கள், முடக்கப் பார்த்தார்கள். ஆனால், முடியவில்லை. சுதந்திரம் பெற்ற பிறகும், மன்னராட்சி, குடும்ப ஆட்சி வேண்டும் என்று நினைக்கின்றனர். வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் இருக்கும். அ.தி.மு.க., வலுப்பெற்று இருக்கிறது. தி.மு.க., தேய்கிறது. மக்களின் பணத்தை தி.மு.க., வீணடிக்கிறது. உதயநிதி, இன்பநிதி என எல்லாருக்கும் நிதி என பெயர். நிதி தான் அவர்களுக்கு முக்கியம்.

எம்.ஜி.ஆர்., அம்மா இருக்கும் போது கட்சி வளர எப்படி துணை நின்றீர்களோ, அதேபோல எப்போதும் துணை நிற்க வேண்டும். தமிழக பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகையை அ.தி.மு.க.,தான் போராடிப் பெற்றுத் தந்தது. ரூ.1,500 தருகிறோம் என அ.தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தோம். ஆனால், யாரோ சிலர் சொன்னார்கள் என்பதற்காக தி.மு.க.,வுக்கு ஓட்டு போட்டீர்கள்’’இவ்வாறு இ.பி.எஸ்., பேசினார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில், பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘‘சேலத்துக்கு அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்த திட்டத்தை கூட இந்த அரசு நிறைவேற்றவில்லை. தி.மு.க., என்றால் கமிஷன், கலெக்சன், கரப்ஷன். மீனவர்கள் விவகாரத்தில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

கச்சத்தீவை யார் தாரை வார்த்து கொடுத்தது என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது கண்டிக்கத்தக்கது. கடலில் எல்லை பகுதி தெரியாததால் தான் மீனவர்கள் தாண்டி செல்கின்றனர். தி.மு.க.,வை வீழ்த்துவது தான் எங்கள் குறி. எங்களுக்கு ஒரே எதிரி தி.மு.க., தான்.

யார், யாருடன் கூட்டணி என்பதெல்லாம் ஆறு மாதத்தில் தெரியும். அதை மறைக்க முடியாது. தி.மு.க.,வை வீழ்த்த அ.தி.மு.க., தயாராக இருக்கிறது. ஒரே எதிரி தி.மு.க., தான். மற்ற கட்சிகள் இல்லை. சிதறி கிடக்கும் ஓட்டுகளை சேர்த்து தி.மு.க.,வை வீழ்த்துவோம்’’ இவ்வாறு இ.பி.எஸ்., தெரிவித்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal