பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்திருந்த நிலையில், எஸ்.பி.வேலுமணியின் இல்ல திருமண நிகழ்வில் நடந்த சம்பவம்தான் எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அதிமுக பாஜக பாமக தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணி உருவாகி இருந்தால் பெரிய அளவிலான வெற்றி கிடைத்திருக்கும் குறைந்தது 5 நாடாளுமன்ற உறுப்பினர்களையாவது பெற்றிருக்கலாம் என பேசப்பட்டது.
அதற்கு முன்னதாக அதிமுக – பாஜக கூட்டணி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கூட்டணி தொடர்பாக பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி அண்ணாமலையின் பேச்சு காரணமாக கூட்டணி அமையாமல் போனது. இதனால் தான் பாஜக கடும் தோல்வியை சந்தித்தது என கூறியிருந்தார். அவரது கருத்தை தமிழிசை சௌந்தரராஜன் வரவேற்று பேசியிருந்தார். மேலும், பஞ்சாயத்து டெல்லி வரை சென்றிருந்த நிலையில், அண்ணாமலையை கூப்பிட்டு விசாரித்துள்ளனர்.
இதனையடுத்து தமிழகத்தில் மீண்டும் அதிமுக பாஜக கூட்டணி உருவாகி 2026 தேர்தலை சந்திப்பார்கள் என கூறப்பட்டு வருகிறது. ஆனால் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடியோ பாஜகவுடன் கூட்டணி இல்லை என திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். அதே நேரத்தில் மற்ற நிர்வாகிகள் மழுப்பலான பதிலையே அளித்திருக்கின்றனர். இந்த நிலையில் தொலைக்காட்சி பேட்டிகளில் எதிரும் புதிருமாக பேசி வந்த அதிமுகவினரும் பாஜகவினரும் நேற்று ஒன்று கூடி பேசியது தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் இல்ல திருமண விழா நேற்று கோவையில் நடைபெற்றது. இதில் பாஜக தரப்பிலிருந்து அண்ணாமலை, தமிழிசை சௌந்தர்ராஜன், வானதி சீனிவாசன், மத்திய அமைச்சர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக முன்னாள் அமைச்சர்களான தங்கமணி, செங்கோட்டையன், அன்பழகன், நத்தம் விஸ்வநாதன், ராதாகிருஷ்ணன், ஆனந்தன் உள்ளிட்டோர் ஏற்கனவே அங்கு காத்திருந்தனர். அப்போது வந்த அண்ணாமலை உள்ளிட்டோரை அதிமுக முன்னாள் அமைச்சர்களும் நிர்வாகிகள் எழுந்து நின்று வரவேற்றனர். ஒவ்வொருவரின் கையைப் பிடித்து அவர்களுடன் நெருக்கமாக அண்ணாமலை பேசிக் கொண்டிருந்தார். அவர்களும் உற்சாகம் பொங்க அண்ணாமலையுடன் பேசிக் கொண்டிருந்தனர்.
தொடர்ந்து மணமக்களை அண்ணாமலை வாழ்த்தி சென்றார். பிற நிர்வாகிகளும் அண்ணாமலையுடன் நன்கு பேசியதை பார்க்க முடிந்தது. இதற்கிடையே பாஜக கூட்டணிக்கான அச்சாரம் தான் எஸ்பி வேலுமணி இல்ல திருமணம் என்கின்றனர் பாஜக நிர்வாகிகள். அதே நேரத்தில் தனக்கு மிகவும் நெருக்கமான நிர்வாகியான எஸ்பி வேலுமணியின் இல்லத்திற்கு திருமண விழாவில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ளாததையும் கவனிக்க வேண்டும்.
வேலுமணி பாஜகவுடன் நெருக்கமாக இருக்கிறார் என்ற வருத்தம் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை எனவும், அவருக்கு பதிலாக அவரது மகனையும் மனைவியையும் அனுப்பி வைத்துள்ளார். எனவே வேலுமணி மீது எடப்பாடி பழனிச்சாமி கோபத்தில் இருப்பது வெளிப்படையாக வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
தவிர, கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போதே தன்னை முன்னிலைப் படுத்த பத்திரிகை அதிபர்களை எஸ்.பி.வேலுமணி தரப்பு சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது!