தேனி மாவட்டத்திற்கு இன்று எடப்பாடி பழனிசாமி வருகை தரும் நிலையில் வரலாற்றுத் தலைவர்களான பென்னி குயிக் மற்றும் ரோசாப்பூ துரையை அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் நினைவு கூர்ந்து விளம்பரப்படுத்தியிருப்பதுதான் தென்மாவட்ட மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று பங்கேற்பதுதான் அ.தி.மு.க.வைத் தாண்டி அரசியல் வட்டாரங்களில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு உயிர் நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை அதிகப்படுத்தவிடாமல் கேரள அரசு முட்டுக்கட்டை போட்டுவந்தது. ஆனால் 37 ஆண்டுகளாக நடந்த சட்டப்போராட்டத்தின் இறுதியில், தமிழகத்துக்கு வெற்றி கிடைத்தது. 2014ம் ஆண்டு ஜூலை 17ம்தேதி, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதற்கு மேற்பார்வை குழு எடுத்த முடிவினை அடுத்து; அடைப்பான்கள் கீழ் இறக்கப்பட்டன.

சமீபகாலத்தில் நதிநீர் போன்ற ஒரு முக்கிய பிரச்சினையில் தமிழகத்திற்கு கிடைத்த பெரும் வெற்றியாக இந்த தீர்ப்பு பார்க்கப்படுகிறது. முல்லை பெரியாறு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தமிழக அரசுக்கும் ஜெயலலிதாவுக்கும் மிகப்பெரிய சாதனையாகவும் பார்க்கப்படுகிறது. பாராட்டு விழா நிகழ்ச்சியின்போது ஜெயலலிதாவுக்கு ‘இரண்டாம் பென்னிகுயிக்’ என்று பட்டம் தரலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே பென்னி குயிக்கிற்கு மணி மண்டபம் அமைத்தவர் ஜெயலலிதா என்பதால் அவருக்கு இந்த பட்டப்பெயர் மிகவும் பொருத்தமாக அமையும் என்று ரத்தத்தின் ரத்தங்கள்!

தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியது அ.தி.மு.க. ஆட்சியில்தான் என இன்றுவரை விவசாயிகள் அ.தி.மு.க. மீது விசுவாசமாக இருக்கின்றனர். இந்த நிலையில்தான் தேனி வரும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று, அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் விளம்பர போஸ்டர்களும், பேனர்களும் வைத்திருக்கிறார். எல்லோரும்தான் விளம்பரம் கொடுக்கிறார்கள் என்றாலும், டாக்டர் கொடுத்த விளம்பரங்களில் வரலாறுகளை நினைவுப் படுத்தியிருக்கிறார்.

அதவாது எடப்பாடி பழனிசாமியை வரவேற்று கொடுத்த விளம்பரங்களில் பென்னி குயிக் மற்றும் ரோசாப்பூ துரையின் புகைப்படத்தையும் அதில் போட்டிருக்கிறார். இவர்கள் இருவரும் தேனிமாவட்ட வளர்ச்சியில் அதிமுக்கிய பங்கு வகித்த வரலாற்றுத் தலைவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

வரலாற்றுத் தலைவரான ரோசப்பூ துரையை மதுரையைச் சேர்ந்த டாக்டர் சரவணன் மீண்டும் நினைவுப் படுத்தியிருக்கிறார். ரோசாப்பூ துரை என்று பாசத்துடன் அழைக்கப்பட்ட, மகாத்மா காந்தியின் உற்ற நண்பரும் விடுதலை போராட்ட வீரரும், சமூகப் போராளியுமான ஜார்ஜ் ஜோசப்பின் பிறந்த தினத்தை மதுரை மக்கள் இன்று நெகிழ்ச்சியோடு கொண்டாடுகிறார்கள். கேரளத்தைச் சேந்த ரோசாப்பூ துரை என்ற ஜார்ஜ் ஜோசப்புக்கும் மதுரைக்கும் என்ன தொடர்பு, அவருடைய பெயரை மதுரை தேனி மாவட்ட மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சூட்டுவது ஏன்? அரசும் ஆட்சியாளர்களும் அவரை மறந்த நிலையில், மதுரை வட்டார மக்கள் மட்டும் ஏன் இவரை கொண்டாடுகிறார்கள்?

மதுரையில் நூற்பாலைகளை ஆங்கிலேயர் நிறுவிய நேரத்தில் கொத்தடிமைகள் போல நடத்தப்பட்ட தொழிலாளர்களுக்கு சங்கங்களை நிறுவி, கூலி உயர்வுக்கும் சலுகைகளுக்கும் சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டார்.

மகாத்மா காந்தியுடன் நட்பில் இருந்தாலும், அவருடைய சில கொள்கைகளுக்கு எதிர் கருத்தும் கொண்டிருந்தார். கதர் அணிய வேண்டும் என்று காந்தி வலியுறுத்தியபோது, பொருளாதார ரீதியாக அது மக்களுக்கு அதிக செலவை உண்டாக்கும் என்று அதற்கு மாற்று யோசனையையும் கூறினார். அதுபோல் காங்கிரஸ் கட்சியின் மீது கோபமடைந்து விலகி இருந்திருக்கிறார். ஆனால், அப்படி இருந்தபோது காந்தி மதுரை வந்தால் இவர் வீட்டில்தான் தங்கிச்செல்வார். மதுரை மாவட்டத்தில் விவசாயிகளின் வறுமை நிலையை பார்த்து காந்தி அரையாடைக்கு மாறும்போது உடனிருந்தவர் ஜார்ஜ் ஜோசப். அவர்தான் காரணமான மக்களின் நிலையை எடுத்துக் கூறினார்.

கேரளாவில் பிறந்து நாடறிந்த பத்திரிகையாளர், விடுதலை வீரராகத் திகழ்ந்து மதுரை மக்களுக்கு நன்மை செய்து மதுரையிலேயே மறைந்தார். இவருடைய சிலை மதுரை யானைக்கல்லில் அப்போது அமைச்சராக இருந்த கக்கனால் அமைக்கப்பட்டது. வரலாற்றை நினைவுகூறும் வகையில் இந்த சிலையைக் கூட சமீபத்தில் டாக்டர் சரவணன் துய்மைப் படுத்தி வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal