மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் ஒன்றிய அரசு இந்தி திணிப்பதை எதிர்த்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தென்காசி மாவட்டத்தில் மாணவர்கள் இயக்கத்தின் கூட்டமைப்பு சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா பேசியதுதான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா, ‘‘உண்மையிலேயே இவ்வளவு சீக்கிரம் வரலாறு திரும்பும் என்று நான் நினைக்கவில்லை. எனென்றால் இந்த விவகாரம் குறித்து எனது தந்தை என்னிடம் நிறைய சொல்லியிருக்கிறார்கள். 100 வருடம் கூட முடியவில்லை. ஒரு நூற்றாண்டுகூட அவர்களால் பொறுக்க முடியவில்லை. 1930 ல் தொடங்கிய இந்த போராட்டம் மீண்டும் ஆரம்பித்திருக்கிறது.

அறிஞர் அண்ணா சொன்னமாதிரி ‘அவர்கள் வருவார்கள்… மீண்டும் படையெடுத்து வருவார்கள்… நாம்தான் கவனமாக இருக்கவேண்டும்…’ என்றார். ஒரு நூற்றாண்டு கூட முடியவில்லை. தமிழன் முன்னேறிவிட்டான்… திராவிட மாடல் ஆட்சியில் தமிழகம் இந்தியாவிலேயே வளர்ச்சி மிகுந்த நாடாக… உலகிலேயே வளர்ச்சி மிகுந்த நாடாக மாறி வருகிறது. வளம் மிகுந்த மொழியை தமிழகம் பெற்றிருக்கிறது என்ற பொறாமையில் அவர்கள் இந்தியை திணிக்கிறார்கள்.

சமஸ்கிருதம் செத்த மொழி! சமஸ்கிருதம் யாராலும் பேசப்படாத மொழி… ஆனால், அந்த மொழியின் ஆராய்ச்சிக்கு ஒன்றிய அரசு வருடத்திற்கு 3 ஆயிரம் கோடி நிதி ஒதுக்குகிறது. உலகிலேயே முதல் ஐந்து செம்மொழிகளாக தமிழ், கிரேக்கம், லத்தீன், ஹிபுரு, சமஸ்கிருதம். இன்று உயிர்ப்புடன் வழக்காடும் மொழியாக, அன்றாட வாழ்க்கையில் பலகோடி பேர் உலகமெங்கும் பேசப்படும் ஒரு செம்மொழி. இதில் தமிழ் முதன்மையான செம்மொழி என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

அத்தகைய பெருமைமிகுந்த தமிழ்மொழியை ஒன்றிய அரசு அழிக்கப் பார்க்கிறது. உலகிலேயே மொழிக்காக உயிரைக் கொடுத்த வரலாறு தமிழ் மொழிக்கு, அதுவும் தமிழகத்திற்குத்தான் உண்டு. இன்றைக்கு நம் தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கையை கற்றுக்கொண்டு தமிழன் உலகின் பல மூளை முடுக்குகளில் எல்லாம் புகுந்து சாதிக்கவில்லையா?

இந்த நிலையில்தான் மும்மொழிக் கொள்கை என்று இந்தியை திணிக்க முயல்கிறது ஒன்றிய அரசு. இந்தியைக் கற்றுக்கொண்டால் வாழ்வில் முன்னேறாமல் பாடிக்கொண்டுதான் திரியவேண்டும். நம்முடைய வளர்ச்சியை பொறுக்க முடியாமல், நம்முடைய சுயமரியாதையை பொறுக்க முடியாமல், நம்மொழியின் வளத்தை பொறுக்க முடியாமல், தமிழகத்தின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் வெந்து சாகிறார்கள் ஒன்றியத்தில் ஆள்பவர்கள்! அவர்களை கிள்ளி எறியவேண்டிய நேரம் இல்லை… அடியோடு வீழ்த்த வேண்டிய நேரம் இது..! என்று ஆவேசமாக பேசினார் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா!

முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணாவின் அடுக்குமொழிப் பேச்சுக்கள் அங்கிருந்த பெண்கள் உள்பட அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal