விழுப்புரம் மாவட்ட திமுக-வை மூன்றாக பிரித்திருக்கும் திமுக தலைமை, புதிதாக பிறந்திருக்கும் விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக-வுக்கு அதிமுக-விலிருந்து வந்த லட்சுமணனை பொறுப்பாளராக்கி இருக்கிறது. 2021-ல் விழுப்புரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை தோற்கடித்தவர் இந்த லட்சுமணன் என்பது கூடுதல் தகவல்.

ஒரு காலத்​தில் பாமக இதேபோல் மாவட்​டங்​களைப் பிரித்து அதிகாரப் பரவலை செய்​த​போது அதை பரிகாசம் செய்த கட்சி திமுக. இப்போது அவர்களே பாமக வழிக்​குப் போயிருக்​கிறார்​கள். கள்ளகுறிச்​சியை உள்ளடக்கிய ஒன்று​பட்ட விழுப்புரம் மாவட்​டத்​துக்​கும் அமைச்சர் பொன்​முடி தான் செயலா​ளராக இருந்​தார்.

சுமார் 12 ஆண்டு​களுக்கு முன்பு நிர்வாக வசதிக்காக விழுப்புரம் மாவட்​டத்தை வடக்கு, தெற்கு என இரண்​டாகப் பிரித்தது திமுக. அப்போது வடக்கு மாவட்டச் செயலா​ளராக பொன்​முடி​யும் தெற்கு மாவட்டச் செயலா​ளராக அங்கயற்​கன்னி​யும் நியமிக்​கபட்​டனர். பொன்​முடி துணைப் பொதுச்​செய​லாளர் ஆனதும் வடக்கு மாவட்​டத்​துக்கு மஸ்தானும், தெற்கு மாவட்​டத்​துக்கு புகழேந்​தி​யும் செயலாளர்களாக நியமிக்​கப்​பட்​டார்​கள்.

அண்மை​யில் உடல்​நலக் குறை​வால் புகழேந்தி காலமான​தால் பொன்​முடி​யின் மகன் கவுதம சிகாமணி தெற்கு மாவட்ட பொறுப்​பாள​ராக​வும் மஸ்தானுக்கு பதில் டாக்டர் சேகர் வடக்கு மாவட்ட பொறுப்​பாள​ராக​வும் நியமிக்​கப்​பட்​டனர். சேகர் வகித்து வந்த மாவட்ட அவைத்​தலைவர் பதவி மஸ்தானுக்கு வழங்​கப்​பட்​டது.

இந்த நிலை​யில், தேர்தலை குறி​வைத்து விழுப்புரம் மாவட்ட திமுக-வை மீண்​டும் கலைத்​துப் போட்​டிருக்​கும் திமுக தலைமை, புதிதாக விழுப்புரம் மத்திய மாவட்டம் என்று ஒன்றை உருவாக்கி அதற்கு அதிமுக வரவான லட்சுமணனை பொறுப்​பாள​ராக்கி இருக்​கிறது. கூடவே, முன்​னாள் அமைச்​சரான மஸ்தானை மீண்​டும் விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்​பாள​ராக​வும், கவுதம சிகாமணியை தெற்கு மாவட்ட பொறுப்​பாள​ராக​வும் அறிவித்​திருக்​கிறார்​கள்.

பல ஆண்டுகளாக விழுப்புரம் மாவட்டத்தை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த பொன்முடி, தற்போது விழுப்புரம் லட்சுமணன் கட்டுப்பாட்டிற்குள் சென்றதை ரசிக்கவில்லை. இதனால், தி.மு.க. தலைமை மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார். பொன்முடியை சரிகட்டுவதற்குதான் அவருக்கு கூடுதலாக ராஜகண்ணப்பன் வசம் இருந்த கதர் துறை வழங்கப்பட்டிருக்கிறது.

கூடுதல் இலாகா வழங்கப்பட்டாலும் பொன்முடியும், அவரது ஆதரவாளர்களும் அதிருப்தியில் இருக்கின்றனர். இந்த அதிருப்தியை சரிகட்டும் பணியில் இறங்கியிருக்கிறார் ஆ.ராசா!

அதே போல், ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சரான தோப்பு வெங்கடாஜலத்திற்கு திமுகவில் மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தல் வரை அதிமுகவில் இருந்த அவர் அதற்கு பிறகு திமுகவில் இணைந்தார். இதை அடுத்து தற்போது ஈரோடு மத்திய மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதற்கு திமுகவினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக பெருந்துறை ஒன்றிய செயலாளரான கே.பி.சாமி தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். பெருந்துறையில் தோப்பு வெங்கடாசலத்திற்கு எதிராக பல ஆண்டுகளாக திமுகவினர் அரசியல் செய்து வந்த நிலையில் கட்சியில் தற்போது அவருக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பகுதியிலும் சமாதானப் படலம் தொடங்கியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal