மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை அ.தி.மு.க.வினரைத் தாண்டி மக்களும் ‘அம்மா’ என்றுதான் அழைப்பார்கள். சமீபத்தில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், ‘தன்னை அப்பா என்று அழைப்பது பெருமையாக இருக்கிறது’ என்றார். இதற்குதான் அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் சரமாரியாக ஸ்டாலினுக்கு கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.

‘‘முதல்வர் ஸ்டாலினை இளைய தலைமுறை அப்பாவாக ஏற்கவில்லை. ஹிட்லராக தான் ஸ்டாலினை பார்க்கிறார்கள்’’ என அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன்,

‘‘முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி, பதில் வடிவம் என்று கேள்வி தானே தயாரித்து அதற்கான விடையும் தானே தயாரித்து, தான் செய்யும் மக்கள் விரோத செயல்களை திசைத் திருப்பும் வகையில் பேசி வருகிறார்.

இதில் இளைய தலைமுறை என்னை அப்பா என்று அழைப்பதை கேட்கும்போது ஆனந்தமாக இருக்கிறது திமுக தலைவர், தமிழக முதல்வர் பொறுப்புகள் மாறலாம் ஆனால் இந்த அப்பா என்ற உறவு மாறாது அந்த சொல் என் பொறுப்புகளை இன்னும் கூடியிருக்கிறது என்று வாய்க்கூசாமல் பேசியுள்ளார்.

இன்றைக்கு இளைய தலைமுறைக்கு ஸ்டாலின் அளித்த தேர்தல் வாக்குறுதியை எதை நிறைவேற்றி உள்ளார்? ஒரே ஆண்டில் 10 லட்சம் வேலை வாய்ப்பு என்று கூறினார். இதுவரை 40 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி உள்ளாரா? நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறினார் அதை நிறைவேற்றினாரா? மாணவர் வாங்கிய கல்விக்கடன் ரத்து செய்வோம் என்று கூறினார்கள் அதை நிறைவேற்றினாரா? ஐந்தரை லட்சம் அரசு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கூறினார் அதை நிறைவேற்றினாரா? எதையும் செய்யாமல் தனது மகன் உதயநிதியை இன்றைக்கு துணை முதலமைச்சராக்கி உள்ளார் இதன் மூலம் அவரது குடும்பத்துக்கு மட்டும்தான் அப்பாவாக செய்துள்ளார் தமிழக மக்களுக்கு என்ன செய்தார்?

புரட்சித்தலைவி அம்மா மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம் வழங்கினார், ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டம் வழங்கினார் அதை எல்லாம் இன்றைக்கு ஸ்டாலின் அரசு நிறுத்திவிட்டது.

இன்றைக்கு இளைஞர்கள் வேலை வாய்ப்பு கிடைக்காமல் மனம் சோர்வடைந்து, போதை கலாச்சாரத்தில் திசை மாற்றம் அடைந்தது தான் இன்றைக்கு வேதனையாக உள்ளது. இன்றைக்கு தவறுகளை தட்டி கேட்கும் இளைஞர்களுக்கு பாதுகாப்பு இல்லை குறிப்பாக மாணவிகளுக்கு, வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை இன்றைக்கு தமிழகமே சுடுகாடாக உள்ளது.

இன்றைக்கு ஸ்டாலின் இளைய தலைமுறைக்கு அப்பாவாக தெரியவில்லை ஹிட்லராக தான் தெரிகிறார் என்பதுதான் நிதர்சன உண்மை. எடப்பாடியார் தமிழக முதலமைச்சராக இருந்த பொழுது 7.5 சகவீகத இட ஒதுக்கீட்டை வழங்கி இதன் மூலம் இது வரை 3,446 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பை பெற்றுள்ளனர் .கொரோனா காலத்தில் மாணவர்கள் மனசோர்வு அடையக்கூடாது என்று ஆல்பாஸ் அளித்து அதன் மூலம் ஆல் பாஸ் முதல்வர் என்று மாணவ சமுதாயம் அழைத்தது .9 லட்சம் மாணவர்களுக்கு 2ஜி டேட்டா வழங்கினார்.தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கினார். அதேபோல் உழைக்கும் பெண்களுக்கு இருசக்கர வாகனத்தை மானிய விலையில் வழங்கினார்.

இன்றைக்கு ஒட்டுமொத்த இளையதலைமுறைக்கும் தாயாக, தந்தையாக,ஆசானாக, சகோதரனாக எடப்பாடியார் திகழ்கிறார் என்பதுதான் ஒட்டுமொத்த இளைய சமுதாயத்தின் உள்ளத்தில் ஒலிக்கும் குரலாக உள்ளது. மீண்டும் 2026 இல் இளைய சமுதாயம் காக்கும் எடப்பாடியார் ஆட்சி மலரும் என்பது நிச்சயம்’’ என கூறியிருக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal