தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் கோஷ்டி பூசல் வெடித்து வருகிறது. மதுரையில் அடிதடியே அரங்கேறியது. அந்த வகையில் சென்னையில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் தனது மனக்குமுறலை கொட்டித் தீர்த்திருக்கிறார் கோகுல இந்திரா!

சென்னையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கோகுல இந்திரா பேசியதாவது: ‘‘நேர்மை என்பது எல்லா இடத்திலும் இருக்க வேண்டும்; என்னை பார்த்த உடனே நிறைய பேர் கும்பிடுவதற்கு பயப்படுகின்றனர்; என்னுடய போட்டோவை கார்னரில் போடுவதற்கு அச்சப்படுகின்றனர். இதை எல்லாம் நாம் தவிர்க்க வேண்டும்.

இப்போதும் சொல்கிறேன்.. யார் வேண்டுமானாலும் வேட்பாளராக வரலாம்; யாரை வேண்டுமானாலும் பொதுச்செயலாளர் முடிவு செய்யலாம்; சீட் வேண்டும் என்பதற்காக யாரும் கேட்கலாம். நான் யாருடைய மனதையும் புண்படும்படியாக செயல்படவில்லை. தென் சென்னை பொறுப்பாளராக என்னை அறிவித்த பின்னர் நிறைய பேர் கூப்பிட்டனர்;பொதுச்செயலாளர் இட்ட கட்டளைக்கு மாறாக, மத்திய சென்னை தொகுதியிலோ, அண்ணா நகர் தொகுதி தேர்தல் பணிகளோ நான் தலையிட்டதே கிடையாது. நாம் மூக்கை நுழைத்து குழப்பம் வந்துவிடக் கூடாது; நாம் தலையிடுவதால் பிரச்சனைகள் வரக் கூடாது என்பதற்காக ரொம்ப ரொம்ப நாகரிகமாக ஒதுங்கிக் கொண்டேன்.

நான் யாருக்குமே தொந்தரவு கொடுப்பதும் இல்லை; நான் யாரிடமும் குரூப்பிசமும் செய்வது இல்லை. எங்களைப் பார்த்தால்.. எங்களிடம் பேசினால்.. எங்கள் பெயர் நோட்டீசில் போட்டால் பதவி பறிபோய்விடும் என்ற நிலைமைகள் மாற வேண்டும். நீங்கள் எல்லாம் பல்வேறு பதவிகளில் பல்லாண்டு இருந்து சிறப்பாக வாழ வேண்டும் என்பதுதான் என் வாழ்த்து. தென் சென்னையில் 4 மாவட்ட செயலாளர்களுடன் பணியாற்றினேன்.. என்னால் உங்களுக்கு ஏதாவது ஒரு இடையூறு வந்ததா? என்னால் உங்களுக்கு ஏதாவது தொந்தரவு இருந்ததா?

யார் வேட்பாளர் என்பதை முடிவு செய்வது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான். அது எனக்கு நன்றாக தெளிவாகவே தெரியும். நான் தேர்தலில் சீட் வாங்குவதற்காக இல்லை. எப்போதும் வீட்டில் அன்பையும் மரியாதையையும்தான் எதிர்பார்ப்பார்கள். அப்படி எதிர்பார்க்கிற நிலையில் என் பெயரை போடக் கூடாது; போஸ்டரில் அவங்க பெயரே வந்துவிடக் கூடாது.. என நினைக்கிறார்கள்.

இந்த கூவத்தின் கரையோர வெள்ளத்தில் கழுத்தளவு தண்ணீரில் உங்களோடு உங்களாக நின்ற என்னுடைய பெயரை போடுவதற்கு உங்களால் எப்படி மறக்க முடிகிறது? அப்படி என்ன நிர்பந்தம் உங்களுக்கு? தம்பி ஹேமந்த், தம்பி குப்பனுக்கு என்ன நிர்பந்தம்? நீங்கதானே வட்டச் செயலாளர்..’’ என தன்னுடைய குமுறலை வெளிப்படுத்தினார் கோகுல இந்திரா.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal