அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் செங்கோட்டையன் தி.மு.க. விரித்திருக்கும் வலையில் சிக்குவாரா? அல்லது த.வெ.க.வின் வலையில் சிக்குவாரா? என்பதுதான் கொங்குமண்டலத்தில் ஹாட்டாபிக்காக இருக்கிறது.
அத்திகடவு – அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் விழா கோவை அன்னூர் அருகே நேற்று (9.2.2025) நடைபெற்றது.
விழா மேடைக்கு மாட்டு வண்டியில் வந்திறங்கிய எடப்பாடி பழனிசாமி மேடையில் பேசும் போது, “நான் யாருக்கும் அடிமையாக மாட்டேன்; பணத்தாலும் பொருளாலும் என்னை யாரும் அடிமைப்படுத்த முடியாது. மக்கள் நலனை பற்றி திமுக அரசுக்கு அக்கறை இல்லை; திறமையற்ற அரசு ஆட்சியில் உள்ளது. அத்திக்கடவு – அவினாசி திட்டத்தின் 85 சதவீத பணிகள் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டு விட்டன. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நான்கு ஆண்டுக் காலம் இத்திட்டத்தை திமுக கிடப்பில் போட்டது.இந்த அரசு எந்த ஒரு புதிய திட்டத்தையும் கொண்டுவர முயற்சி செய்யாமல் திறந்து மட்டுமே வைத்து வருகிறது. விவசாயிகளின் கனவை அதிமுக நிறைவேற்றி உள்ளது. மத்திய அரசை எதிர்பார்க்காமல் மாநில அரசு நிதியை ஒதுக்கித் திட்டத்தை தொடங்கி வைத்தேன். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்ததும் அதிமுக திட்டங்களை நிறுத்தி வைக்கப்பட்டன” என்றார்.
இந்த விழாவில் விவசாயிகள், அதிமுக முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கலந்துகொண்டனர். ஆனால் அதிமுகவின் மூத்த தலைவர்களின் ஒருவரான செங்கோட்டையன் கலந்துகொள்ளாதது கட்சியினர் மற்றும் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
எடப்பாடி பழனிசாமி பாராட்டு விழாவில் செங்கோட்டையன் பங்கேற்காதது ஏன்? என்பது குறித்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களிடம் பதில் அளித்துள்ளார்.
அதன்படி, ‘‘அத்திக்கடவு- அவினாசி திட்டத்தில் விழாவை ஏற்பாடு செய்த குழுவினர் 3 நாட்களுக்கு முன்னர் என்னை சந்தித்தனர்.அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திற்கு நிதி வழங்கியவர் ஜெயலலிதா. 2011யில் ஜெயலலிதா ரூ.3.72 கோடி நிதி அளித்தார். திட்டப் பணிகளை தொடங்க அடித்தளமாக இருந்த தலைவர்களின் படங்கள் மேடையில் இல்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் இல்லாததால் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு தெரிவிக்கும் விழாவை நான் புறக்கணிக்கவில்லை. விழாவிற்கு செல்லவில்லை‘‘ என்று கூறினார்.
செங்கோட்டையனின் அதிருப்திக்கு என்ன காரணம் என அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசினோம்.
‘‘ தம்பி… தமிழக அரசியல் களத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு நீண்ட நெடிய அனுபவம் உண்டு. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கே பிரச்சார வியூகங்களை வகுத்துக் கொடுத்தவர்தான் செங்கோட்டையன். தவிர, ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அ.தி.மு.க.வில் ஏற்பட்ட சலசலப்பின் போது, ‘பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கங்களைக் கொடுத்ததும் செங்கோட்டையன்தான். இந்த விளக்கங்களை கொடுக்கச் சொன்னது சசிகலா. காரணம், செங்கோட்யைனின் அனுபவத்தை சசிகலாவும் அறியாதவர் அல்ல!
ஆனால், எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்ற பிறகு ஆட்சியை சிறப்பாக நடத்தினார். ஆனால், கட்சியை சிறப்பாக வழிநடத்த தவறிவிட்டார். காரணம், இவருக்கு நெருக்கமாக இருக்கும் ஒருவர் ‘விட்டமினை’ வாங்கிக்கொண்டு அனுபவம் இல்லாதவர்களையும், அனுசரித்துச் செல்லாதவர்களையும் மா.செ.க்களாக நியமித்தார் என்கிறார்கள். இதற்கு மலைக்கோட்டையில் நடந்து வரும் மல்லுக்கேட்டே உதாரணம்!
இந்த நிலையில்தான் ஈரோட்டில் மறைந்த ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். காலத்தில் செல்வாக்காக இருந்த செங்கோட்டையன் எடப்பாடி காலத்தில் செல்வாக்கை இழந்து காணப்படுவதாக ஒரு தகவல். அதற்கும் ஒரு காரணம், முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் என்கிறார்கள். காரணம், செங்கோட்டையனுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பார்த்துக்கொள்கிறார். இவர் எடப்பாடியின் சம்பந்திக்கு நெருங்கிய உறவுக்காரர் என்பதால், எடப்பாடியாலும் கே.சி.கருப்பண்ணன் செயலை மீற முடியவில்லை. இந்த நிலையில்தான் செங்கோட்டையன் ஒதுங்கியிருக்கிறார்.
ஏற்கனவே, அ.தி.மு.க.வின் கோட்டையாக இருந்த கொங்குமண்டலத்தில் செந்தில் பாலாஜி ஓட்டைபோட்டு விட்டார். தற்போது, அதிருப்தியில் இருக்கும் செங்கோட்டையனும் தி.மு.க.விற்கு வந்துவிட்டால், தி.மு.க.வின் செல்வாக்கு கொங்குமண்டலத்தில் உயரும் என கணக்குப் போட்ட தி.மு.க. தலைமை செங்கோட்டையனுக்கு வலை விரிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த விலையில் சிக்குவாரா? அல்லது விஜய் வலையில் சிக்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்’’ என்றவர், ‘செங்கோட்டையன் தி.மு.க.விற்கு வருவதை ‘முத்தான’ அமைச்சர் விரும்பவில்லை. காரணம், செங்கோட்டையனுக்கு தி.மு.க.வில் ‘பவர்’ அதிகமாகிவிடும் என்று நினைக்கிறார் அந்த ‘சாமி’!’’ என கண் சிமிட்டினார்.